சிலாங்கூர்: மலேசியாவில் செல்லப் பிராணிகள் சார்ந்த வர்த்தகம் வளர்ந்துவரும் ஒரு துறையாகும்.
ஆயினும் அவற்றில் நாய்கள் பேரங்காடிகளுக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து அந்நாட்டின் பெரும்பான்மை மக்களான மலாய் முஸ்லிம் சமூகத்தினர் இஸ்லாமிய சமய மன்றத்திடம் தங்களின் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் ‘சன்வே ஸ்குவேர் மால்’ பேரங்காடி நிலையம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. அங்கு வருகையாளர்களுடன் அவர்களின் செல்லப் பிராணிகளும் வரலாம் என்று நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளும் மாநில அரசாங்கமும் அதிருப்திகளைப் பதிவுசெய்தனர். பேரங்காடியின் நிர்வாகத்தினர் பெரும்பான்மை மக்களின் சமய உணர்வுகளுக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிட்டனர் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
சிலாங்கூரின் மாநில அரசாங்கம் பல இனங்கள் அடங்கியுள்ள சமூக ஒற்றுமையை முன்வைத்து பேரங்காடி அதன் முடிவை மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. விலங்குநல அமைப்புகள் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
பேரங்காடி திறந்த ஒரே வாரத்தில் அதன் நிர்வாகம் முடிவை மாற்றிக்கொண்டது. இன்ஸ்டகிராமில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) பதிவேற்றிய அறிவிப்பில், செல்லப் பிராணிகளுக்கான அனுமதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
“அரசாங்கம் வழங்கியுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, சன்வே ஸ்குவேர் மால் பேரங்காடியின் உள்புற வளாகத்துக்குள் பிராணிகள் வருவதற்கு அனுமதி இல்லை. அனைத்து வருகையாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்லாருக்கும் உகந்த வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் பிராணிகளுடன் வருவோர், அருகில் அமைந்துள்ள வெளிப்புறப் பூங்காவுக்குள் அவைகளுடன் செல்லலாம் என்று பதிவில் அது தெரிவித்துள்ளது.
சமூக ஒற்றுமையை நிலைநாட்ட பேரங்காடிகளின் உள்வளாகங்களில் பிராணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சி, சுற்றுலாத் துறையின் நிர்வாக மன்ற உறுப்பினர் திரு அங் சூவீ லிம் செய்தியாளர்களிடம் கூறினார்.

