தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெட்டாலிங் ஜெயா: நான்கு ஆண்டுகளில் 6,000 காகங்களுக்கு முடிவு

1 mins read
c54744b8-fb44-4334-b14a-a756c6124ecd
சுட்டுவீழ்த்தப்படும் ஒவ்வொரு காகத்திற்கும் அதனைச் சுட்டவருக்கு வெகுமதியாக ஆறு ரிங்கிட் வழங்கப்படுகிறது. - படம்: தி ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், பெட்டாலிங் ஜெயாவில் கிட்டத்தட்ட 6,000 காகங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இவ்வாண்டில் காகங்கள் அதிகம் தென்படும் 26 இடங்களில், காவல்துறையின் அனுமதியுடன் காகங்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக பெட்டாலிங் ஜெயா நகர மன்றம் தெரிவித்தது.

“காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடே பெரிதும் கைகொடுக்கிறது,” என்று பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மது ஸாஹ்ரி சமிங்கோன் நகர மன்றக் கூட்டத்தின்போது கூறினார்.

அத்துடன், மாதத்திற்குக் குறைந்தது இருமுறை காக்கைக் கூடுகளை அகற்றி, காக்கை வலையை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் சொன்னார்.

சுட்டு வீழ்த்தப்படும் ஒவ்வொரு காக்கைக்கும் அதனைச் சுட்டவருக்கு நகர மன்றம் ஆறு ரிங்கிட் வெகுமதி வழங்குகிறது.

2021ல் 1,319, 2022ல் 941, 2023ல் 2,090, இவ்வாண்டில் 1,546 எனக் கடந்த நாலாண்டுகளில் மொத்தம் 5,896 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டன என்றும் அதற்காக நகர மன்றம் 35,376 ரிங்கிட் (S$10,670) செலவழித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நாய், பூனை, கோழி உள்ளிட்ட செல்லப் பிராணிகளால் தொல்லை ஏற்பட்டால், சட்ட விதிகளை மீறியதாகக் கூறி, அவற்றின் உரிமையாளர்களுக்கு 500 முதல் 1,000 ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று பெட்டாலிங் ஜெயா நகர மன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்