பெட்ரோனாஸ் தீச்சம்பவம்: எரிவாயுக் குழாய் அருகே குழி தோண்டிய ஒப்பந்ததாரர் தேடப்படுகிறார்

2 mins read
c6069c3e-d473-4892-a452-8fba89482a62
தீச்சம்பவத்தினால் 227 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 78 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிலாங்கூர்: கோலாலம்பூர் அருகே உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) மிக மோசமான தீச்சம்பவம் ஏற்பட்டது.

அதில் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், தீச்சம்பவம் குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்கள் இருக்கும் இடத்திற்கு அருகே கட்டட வேலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டட வேலைகளுக்காகக் குழி தோண்டப்படும் போது குழாய்கள் சேதமடைந்து வெடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கட்டட ஒப்பந்ததாரரை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.

கட்டட வேலை நடந்ததாகக் கூறப்படும் அந்த இடம் பெட்ரோனாசுக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தில் வேலை செய்ய ஒப்பந்ததாரர் தகுந்த உரிமம் வைத்திருந்தாரா என்றும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே கட்டட வேலைகளுக்காக பெட்ரோனாஸ் நிறுவனம் ஒப்பந்ததாரருக்கு உரிமம் அளித்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

வெடிப்புச் சம்பவத்தையடுத்து அதன் அருகில் உள்ள வீடுகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகாரிகள் பாதுகாப்பு ஆய்வை நடத்தினர்.

வீடுகள் பாதுகாப்பாக இருந்தால் அங்குக் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் இல்லை என்றால் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, எதனால் குழாய் வெடிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தீ மற்றும் மீட்பு படை பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக சிலாங்கூர் காவல்துறை தெரிவித்தது.

தீச்சம்பவத்தினால் 74 குடும்பங்களைச் சேர்ந்த 364 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளைச் சரிசெய்ய அரசாங்கமும் பெட்ரோனாஸ் நிறுவனமும் தகுந்த உதவிகளை வழங்கும். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

தீச்சம்பவத்தினால் 227 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 78 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்