மணிலா: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் பிலிப்பீன்ஸ் கப்பல் ஒன்றை அணுகியபோது, பிலிப்பீன்ஸ் மாலுமி ஒருவரைச் சீனக் கடலோரக் காவற்படையினர் தடியால் தாக்கியதாகப் பிலிப்பீன்ஸ் ராணுவம் திங்கட்கிழமை (ஜூலை 20) குற்றஞ்சாட்டியுள்ளது.
இரு நாடுகளின் முன்னணி அரசதந்திரிகள் இந்த வாரம் மணிலாவில் நடைபெறும் வட்டார மாநாட்டில் சந்தித்துப் பேசுவார்கள் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அச்சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
‘ஸ்ப்ராட்லி’ (Spratly) தீவுக்கூட்டத்தில் உள்ள பதற்றமான ‘செகன்ட் தாமஸ் ஷோல்’ (Second Thomas Shoal) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ‘பிஆர்பி சியெரா மாட்ரே (BRP Sierra Madre) கப்பலை, எட்டு ஆடவர்களுடன் வந்த சீனப் படகு ஒன்று சுற்றி வலம் வந்ததாக பிலிப்பீன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அதோடு, அவர்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்ததாகவும் அது கூறியது.
“சீனக் கடலோரக் காவற்படை அதிகாரி மிக வன்மையாக பிலிப்பீன்ஸ் கடற்படை அதிகாரி ஒருவரைத் தடியால் தலையில் தாக்கிக் காயப்படுத்தியதோடு, கடற்படையின் ரப்பர் படகையும் சேதப்படுத்தினார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம், சீனக் கடலோரக் காவற்படையினரின் தூண்டக்கூடிய, பகைமை உணர்வு கொண்ட நடத்தையைத் தெளிவாகக் காட்டுகிறது,” என்று பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட தனிப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதன் தொடர்பில் கருத்துக் கேட்டபோது, மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை.

