மணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் சீன ராணுவத்துக்குச் சொந்தமான கப்பல்கள் காணப்பட்டது குறித்து பிலிப்பீன்ஸ் ராணுவம் கவலை தெரிவித்துள்ளது.
இரோகோயிஸ் ரீஃப் வட்டாரத்தில் சீன மீன்பிடிப் படகுகள் 47 காணப்பட்டதாகவும் சபினா ஷோல் பகுதியில் இரண்டு போர்க்கப்பல்கள் உள்பட சீனக் கடற்படையின் ஏழு கப்பல்களைக் காண முடிந்ததாகவும் அது கூறியது.
பிப்ரவரி மாதம் இரோகோயிஸ் ரீஃப் வட்டாரத்தில் 12 மீன்பிடிப் படகுகள் மட்டுமே காணப்பட்டதாக பிலிப்பீன்ஸ் ராணுவம் குறிப்பிட்டது.
“தற்போது 47 மீன்பிடிப் படகுகள், ஐந்து முதல் ஏழு படகுகள் அடங்கிய குழுக்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு மீன்பிடி நடவடிக்கை ஏதும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. அவை அந்த வட்டாரத்தில் வெறுமனே சுற்றித் திரிகின்றன,” என்று ஆகாயக் கண்காணிப்புப் பிரிவின் விமானி ஒருவர் கூறினார். ஸ்பிராட்லித் தீவு வட்டாரத்தை அவரது குழு கண்காணித்தது.
சபினா ஷோல் வட்டாரத்தில் சீனக் கடற்படையின் இரண்டு போர்க் கப்பல்களும் சீனக் கடலோரக் காவற்படையின் மூன்று கப்பல்களும் வழக்கமாக சுற்றித் திரிவதாகக் கூறப்பட்டது.
தங்களது அரசுரிமையை மதிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும்படி சீனாவிற்கு ஏற்கெனவே தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அடுத்து பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வலுவான தற்காப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறார்.
இருந்தபோதும் சீனாவுடனான உறவுகளையும் அவர் சீராகக் கையாண்டு வருகிறார். கடல்துறை சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொலைபேசித் தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.