மணிலா: தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பவளப்பாறைக்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் கூடுதல் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுமென்று பிலிப்பீன்ஸ் ராணுவத் தளபதி வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை, பவளப்பாறைக்குப் பொருள்களை ஏற்றிச்சென்ற பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படைக் கப்பல்கள்மீதும் படகுகள்மீதும் சீனாவின் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் நீரைப் பீய்ச்சித் தாக்குதல் நடத்தின.
இதனால், பவளப்பாறையின் ‘செகண்ட் தாமஸ்’ மணல்திட்டில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிலிப்பினோ படையினருக்குக் கொண்டு செல்லப்பட்ட உணவு, தண்ணீர், எரிபொருள் அனைத்தையும் படகுகளிலிருந்து இறக்க முடியாமல் போனது.
இச்சம்பவத்தால் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையில் மீண்டும் அரசதந்திரப் பூசல் ஏற்பட்டது. சீனாவின் செயலை உலக நாடுகளும் கண்டித்தன.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் சீனாவின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக, 1999ஆம் ஆண்டு பாதி மூழ்கிய நிலையிலிருந்த பவளப்பாறை மணல்திட்டின்மீது ஒரு பழைய கப்பலை வேண்டுமென்றே தரைதட்டி நிலைநிறுத்தியது பிலிப்பீன்ஸ். அதில் தங்கியிருக்கும் ராணுவப் படையினருக்குத் தேவையான பொருள்கள் படகில் எடுத்துச்சென்று கொடுக்கப்படுகின்றன.
கடந்த சனிக்கிழமை பொருள்களை ஏற்றிச்சென்ற படகுகளில் ஒன்று மணல்திட்டை அடையவிடாமல் தடுக்கப்பட்டது. மற்றொரு படகு வெற்றிகரமாகச் சரக்குகளை இறக்கியது.
பொருள்கள் தீர்ந்து போவதற்குமுன் அடுத்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுமென்று பலாவான் தீவின் பிலிப்பீன்ஸ் ஆயுதப்படை தளபதி வைஸ் அட்மிரல் ஆல்பர்டோ கார்லோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இம்முறை மறுபடியும் நீரைப் பீய்ச்சியடிக்கும் சம்பவம் நடக்காதென்று நம்புவதாகவும் அவர் சொன்னார். விமானம்வழி பொருள்களை இறக்கும் சாத்தியமும் ஆராயப்படுவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சீனா ஒட்டுமொத்த தென்சீனக் கடல் பகுதிக்கும் உரிமை கொண்டாடுகிறது. அதன் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் படகுகளைப் பின்தொடர்வதாக அல்லது தடுப்பதாக பிலிப்பீன்ஸ் கூறுகிறது.
கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையைத் தற்காத்துப் பேசிய சீனா, தரைதட்டிய கப்பலுக்கு பிலிப்பீன்ஸ் ‘சட்டவிரோதமாகக் கட்டுமானப் பொருள்களை எடுத்துச் சென்றதாகக்’ குற்றம் சாட்டுகிறது.
ஆனால், ‘செகண்ட் தாமஸ்’ மணல்திட்டு தனது பொருளியல் மண்டலத்தில் இருப்பதால், கப்பலைப் பழுதுபார்க்கவும் படையினருக்குப் பொருள்களை எடுத்துச் செல்லவும் சட்டப்படி உரிமை இருப்பதாக பிலிப்பீன்ஸ் சொல்கிறது.

