மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபரின் மகனும் தற்போது செனட்டராக இருப்பவருமான ஜோஸ் ‘ஜிங்கோய்’ எஸ்ட்ராடா திங்கட்கிழமை (ஜூன் 1) காவல்துறையிடம் சரணடைந்தார்.
உள்கட்டமைப்பு முறைகேடு தொடர்பில் எஸ்ட்ராடாவிற்கு லஞ்சப் பணம் கைமாறியது என்ற குற்றச்சாட்டின்கீழ் அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்பில் சென்ற ஆண்டு பிலிப்பீன்சில் மக்கள் போராட்டம் வெடித்தது.
கிட்டத்தட்ட 573 மில்லியன் பெசோ (கிட்டத்தட்ட S$9.3 மில்லியன்) பெற்ற வகையில் ஊழல் தடுப்புச் சட்டங்களை எஸ்ட்ராடா மீறியதாகக் கூறி, கடந்த வாரம் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
காவல்துறையிடம் சரணடைவதைத் தவிர்த்து நாடாளுமன்ற மேலவையின் பாதுகாப்பை நாடக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் எஸ்ட்ராடா பேசினார்.
“நான் நாடாளுமன்றக் காவலைக் கோரமாட்டேன். நீதிமன்றத்தின்முன் என்னை நான் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சட்ட நடைமுறையிலிருந்து தப்பிக்க நான் நாடாளுமன்றத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள மாட்டேன்,” என்று அவர் கூறினார்.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்துள்ள அவர், தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் சொன்னார்.
இன்னொரு குற்றவியல் வழக்குத் தொடர்பில் கடந்த வாரம் அவர் பிணைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பிலிப்பீன்ஸ் முழுவதும் ஆபத்தான முறையில் குறைபாடுகளுடன் கட்டப்பட்ட வெள்ளக் கட்டுப்பாட்டு வசதிகளை மையமாகக் கொண்டு இந்த ஊழல் முறைகேடு வெடித்துள்ளது.
இது, ஏற்கெனவே ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டை உலுக்கியுள்ளதுடன், அண்மைக் காலாண்டுகளில் அதன் பொருளியல் வளர்ச்சியையும் மந்தப்படுத்தியுள்ளது.

