மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்நாட்டுத் துணை அதிபர் சாரா டுட்டர்டே மீது நாடாளுமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொது நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மே 12ஆம் தேதியன்று பிலிப்பீன்சில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நான்கு மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இருக்காது.
இடைவேளைக்கு முன்னதாகக் கடைசி நேரத்தில் திருவாட்டி சாரா டுட்டர்டேவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருவாட்டி சாரா டுட்டர்டே, குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முதல் பிலிப்பீன்ஸ் துணை அதிபராவார்.
அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய 215 நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்புதல் வழங்கினர்.
அதிபர் மார்கோசுக்கு ஆதரவாக 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற நாயகராக அதிபர் மார்கோசின் உறவினரான மார்ட்டின் ரொமுவால்டேஸ் பதவி வகிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
நிலைமை அதிபர் மார்கோசுக்குச் சாதகமாக இருப்பதால் திருவாட்டி சாரா டுட்டர்டேயின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி பிலிப்பீன்சின் துணை அதிபராகத் திருவாட்டி சாரா டுட்டர்டே நீடிக்கிறார்.
இந்த வழக்கை நாடாளுமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும்.
23 செனட்டர்களில் 16 பேர் அவர் குற்றவாளி என முடிவெடுத்தால் திருவாட்டி சாரா டுட்டர்டே துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யவும் செனட்டர்கள் முடிவெடுக்கக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் திருவாட்டி சாரா டுட்டர்டே துணை அதிபராக நீடிப்பார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதி வரை மட்டுமே நடத்த முடியும்.
ஜூன் மாதம் இறுதியில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பர்.