தவறுதலாக தன்னையே சுட்டுக்கொண்டு மாண்ட பிலிப்பீன்ஸ் துணை மேயர்

1 mins read
6e276568-3b0f-4e29-8efb-f3bbf1104659
இலோயிலோ தீவின் தலைநகரில் உள்ள டுவெனாஸ் பகுதியின் துணை மேயர் திருவாட்டி அய்மி பஸ் லமசான். - படம்: எம்எஸ்என் இணையத்தளம்

இலோயிலோ சிட்டி: பிலிப்பீன்சின் மேற்கில் இலோயிலோ தீவின் தலைநகரில் உள்ள டுவெனாஸ் பகுதியின் துணை மேயர் திருவாட்டி அய்மி பஸ் லமசான், புதன்கிழமை மாலை (டிசம்பர் 31) தனது சொந்தத் துப்பாக்கியைக்கொண்டு தவறுதலாக தம்மையே சுட்டுக்கொண்டதால் உயிரிழந்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆரம்பத்தில் அதிகாரபூர்வமற்ற அச்செய்தி வெளியான பிறகு, டுவெனாஸ் மேயர் ராபர்ட் மார்டின் பாமா, துணை மேயர் இல்லத்தில் நடந்த அச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

“நம் இருவருக்கும் பிரியாவிடைகள் இல்லை. உங்களை அடுத்த பிறவியில் சந்திக்கிறேன். நாம் ஒன்றாக இருப்போம் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்! என் அன்புக்குரிய துணை மேயர் அவர்களே,” என்று மேயர் பாமா ஆங்கிலம் கலந்த (பிலிப்பீன்ஸ்) தகலொக் மொழியில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவாட்டி லமசானுடன் வாழ்ந்துவந்த லார்ட் பைரொன் டொரிகரியோன் என்பவர் இரவு ஏழு மணியளவில் இலோயிலோ நகரின் லா பாஸ் வட்டாரத்தில் அவர்களது இல்லத்தில் விபத்து நடந்துள்ளது என்பதை ‘பனே நியூஸ்’ என்ற உள்ளூர் செய்தித்தாளிடம் விளக்கினார்.

துப்பாக்கியைக் கையாளும்போது தவறுதலாக சுடப்பட்டு அதன் குண்டு துணை மேயரின் வயிற்றைத் துளைத்தது. அவர் உடனே நகரின் செயின்ட் பால்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது மரணம் தொடர்பான மேல்விவரங்கள் ஆராயப்பட்டுவருகின்றன. காவல்துறையினர் விசாரணையின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்