பிலிப்பீன்ஸ் துணை அதிபர்: நான் கொல்லப்பட்டால் அதிபர் மார்கோசும் கொல்லப்படுவார்

1 mins read
a9a8f67d-441c-4589-b4ca-d899e94fb5ea
திருவாட்டி சாரா டுட்டர்ட்டேயின் கருத்துகளுக்கு அதிபர் மார்கோசின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: தாம் கொல்லப்பட்டால் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரும் படுகொலை செய்யப்படுவார் என்று அந்நாட்டின் துணை அதிபர் சாரா டுட்டர்டே நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிபருக்கும் துணை அதிபருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை மோசமடைவதை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“’நான் கொல்லப்பட்டால் அதிபரையும் அவரது மனைவியையும் நாடாளுமன்ற நாயகரையும் கொன்றுவிடுமாறு கொலையாளி ஒருவனுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இதற்கு அந்தக் கொலையாளியும் இசைந்துவிட்டான்,” என்று காலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி டுட்டர்ட்டே தெரிவித்தார்.

“அதிபராகச் செயல்பட தெரியாத, பொய்களைப் பேசுபவர் பிலிப்பீன்சுக்குத் தலைமை தாங்குகிறார். இதனால் நாடு நரகமாகிவிட்டது,” என்றார் அவர்.

திருவாட்டி டுட்டர்டேயின் இப்பேச்சுக்கு எதிராக அதிபர் மார்கோசின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உடனடியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அது கூறியது.

அதிபர் மார்கோசின் குடும்பத்துக்கும் திருவாட்டி டுட்டர்டேயின் தந்தையும் முன்னாள் அதிபரான ரோட்ரிகோ டுட்டர்டேயின் குடும்பத்துக்கும் இடையே வெளியுறவுக் கொள்கைகள் உட்பட பல விவகாரங்கள் தொடர்பாகக் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்