தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொசுக்களைப் பிடித்துக் கொடுத்தால் வெகுமதி

2 mins read
5841e16c-47d3-491b-bd29-dd2c6548c468
கொசுக்கள் உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிடித்துக்கொடுத்தால் வெகுமதி உண்டு. - மாதிரிப்படம்: பிக்சாபே

மணிலா: டெங்கித் தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியாக, கொசுவைப் பிடித்துக் கொடுத்தால் வெகுமதி வழங்கப்படும் என்று பிலிப்பீன்சிலுள்ள ஒரு நகரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கம் மிகுந்த பராங்கே அடிசன் ஹில்ஸ் எனும் அவ்வூரின் தலைவரான கார்லிட்டோ செர்னால், ஐந்து கொசுக்களுக்கு ஒரு பெசோ (2.4 சிங்கப்பூர்க் காசு) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தலைநகர் மணிலாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள, கிட்டத்தட்ட 70,000 பேர் வசிக்கும் அப்பகுதியில் அண்மையில் மாணவர்கள் டெங்கித் தொற்றால் மாண்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொசுக்களை உயிருடனோ இறந்தோ பிடித்து வரலாம், உயிருடன் இருக்கும் கொசுக்கள் பின்னர் புற ஊதா ஒளிக்கதிர் மூலம் அழிக்கப்படும்.

டெங்கிப் பரவலைத் தடுப்பதற்காக தெருக்களைச் சுத்தம் செய்தல், நீர் தேங்காமல் தடுத்து கொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் திரு செர்னால் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) இந்த அறிவிப்பு வெளியானதும் இதன் தொடர்பில் கிண்டல் பதிவுகள் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன.

“வருகிறது கொசுப் பண்ணை!” என்று இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். “ஒரே ஒரு இறக்கை மட்டும் இருக்கும் கொசுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?” என்று கேட்டுள்ளார் இன்னொருவர்.

தம்முடைய அறிவிப்பு குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதை அறிந்துள்ளதாகக் கூறிய திரு செர்னால், ஆனாலும் சமூகத்தின் நலம்பேண அந்நடவடிக்கை தேவை எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே, டெங்கித் தொற்றுக்கு எதிராக உள்ளூர் ஆட்சியாளர்கள் நல்லெண்ணத்துடன் முயல்வதை மெச்சுகிறோம் என்று பிலிப்பீன்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், கொசுக்களைப் பிடித்துக் கொடுப்பதற்கு வெகுமதி வழங்கப்படுவதன் மூலம் டெங்கியைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு அது பதிலளிக்க மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்