பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: அனுதாபம் தெரிவித்த சிங்கப்பூர்

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: அனுதாபம் தெரிவித்த சிங்கப்பூர்

உதவிகள் வழங்க சிங்கப்பூர் தயார்: பிரதமர் லாரன்ஸ் வோங்
படம்: ராய்ட்டர்ஸ்

15 Jun 2026 - 8:25 pm

2 mins read

பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் பிலிப்பீன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அந்நாட்டு அதிபர் ஃபெர்டினான்ட் மார்க்கோசுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார் என்று வெளியுறவு அமைச்சு அதன் விவரங்களை திங்கட்கிழமை (ஜூன் 15) வெளியிட்டுள்ளது.

அங்கு இம்மாதம் 8ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.8 எனப் பதிவான நிலநடுக்கத்தில் 61 பேர் மாண்டதுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் காயமடைந்தனர். பல கட்டடங்கள் இடிந்துவிழுந்ததோடு தென்வட்டாரங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பீன்சுக்கு உடனடி உதவிகள் வழங்க சிங்கப்பூர் தயாராக உள்ளதாகவும் பிரதமர் வோங் அவரது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் பிலிப்பீன்சில் தொடர்ந்து உணரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பலரைக் காணவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணிகள் நடந்துவருவதாகவும் தெரிகிறது.

அந்நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

அதேவேளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்னிலக்க முறையில் அமைச்சுடன் முன்பதிவு செய்துகொண்டோருக்கு உதவிகள் தேவைப்பட்டால் வழங்க அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்படுவதால், உள்ளூர் அரசாங்க அமைப்புகள் வழங்கும் ஆலோசனைகளைக் கேட்டுப் பின்பற்றுவதோடு, அனைத்து தனிமனிதப் பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொள்ளுமாறு அவர்களை அமைச்சு கேட்டுக்கொண்டது.

மணிலாவில் சிங்கப்பூர் தூதரகம்

பிலிப்பீன்சுக்குப் பயணம் மேற்கொள்வோர் வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்துகொள்வதோடு முழுமையான பயணக் காப்புறுதிகளைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பிலிப்பீன்சில் தற்போது தூதரக உதவிகள் தேவைப்படும் சிங்கப்பூரர்கள், தலைநகர் மணிலாவில் இயங்கும் வெளியுறவு அமைச்சின் 6379 8800 அல்லது 6379 8855 எனும் இரு 24 மணிநேரத் தொடர்பு எண்களை அழைக்கும்படி அமைச்சு கோரியது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்நிலநடுக்கம்தூதரகம்உதவிவெளியுறவு அமைச்சுபிரதமர் வோங்அதிபர்