கிஸான்: பிலிப்பீன்சின் பட்டாங்காஸ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலைப் பள்ளி, அனைத்து வகுப்புகளையும் பள்ளி நடவடிக்கைகளையும் ஜூன் 29ஆம் தேதியிலிருந்து ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பள்ளிக்கு எதிராகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவிருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து பள்ளி நிர்வாகம் அந்த முடிவை அறிவித்தது.
“துப்பாக்கிச்சூடு மிரட்டலை அடுத்து அனைத்து வகுப்புகளும் நடவடிக்கைகளும் கூடுதல் தகவல் வரும்வரை ரத்து செய்யப்படும்,” என்று பள்ளி அதிகாரிகள், ஜூன் 28ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் அதிகாரத்துவ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.
ஆனால், மிரட்டல் குறித்த கூடுதல் தகவல்களை அது வெளியிடவில்லை.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர் எனப் பள்ளியைச் சேர்ந்த அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் யாரும் செல்லவேண்டாம் என்று அனைவரிடமும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சூழ்நிலையைக் கையாள சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து அணுக்கமாகச் செயல்படுவதாகக் கூறிய பள்ளி நிர்வாகம், மாணவர்கள், பெற்றோர், ஊழியர்கள் என அனைவரும் அமைதி காக்கும்படியும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் முடிந்த பிறகும் பள்ளிக்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகும்தான் வகுப்புகள் வழக்கம்போலத் தொடங்கும் என்று அது குறிப்பிட்டது.
அனைவரும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்குரிய தகவல்களையோ நடவடிக்கைகளையோ கண்டால் பள்ளி நிர்வாகத்திடமும் உரிய அதிகாரிகளிடமும் உடனடியாகத் தெரிவிக்கும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அது வலியுறுத்தியது.

