மணிலா: பிலிப்பீன்ஸ் அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 99 ஆண்டு நீண்டநாள் நிலக் குத்ததை தந்து நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முற்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தனியார் நிலக் குத்தகைகளை வழங்கும் வகையில் சட்டம் ஒன்றுக்கு அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரபூர்வ அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமலில் இருந்த 1993ஆம் ஆண்டு சட்டப்படி அந்நாட்டு நிலக் குத்தகைகள் 50ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதை ஒரு முறை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று மட்டுமே அந்த சட்டத்தில் வழி இருந்த நிலையில் தற்போதைய சட்டம் 99 ஆண்டு நிலக் குத்தகை வழங்க வழி செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய சட்டத்தின் மூலம் அந்நாட்டு அரசாங்கம் தொழிற்பேட்டைகள், ஆலைகள் போன்றவற்றை நிர்மாணிப்பதுடன் நாட்டில் வேளாண், சுற்றுப்பயணங்களை ஈர்க்கும் திட்டங்களையும் மேற்கொள்ள ஊக்கம் ஏற்படும் என்று அது எதிர்பார்க்கிறது.
இதனால் தாய்லாந்து போன்ற சிறப்பான உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளுடன் முதலீடுகளுக்கு போட்டிபோடும் நிலை பிலிப்பின்சுக்கு ஏற்படும் என்று லீசியூ புராப்பர்டி கன்சல்டண்ட்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் டேவிட் லீசியூ கருத்துரைத்தார்.
“இந்தச் சட்டம் வெளிநாட்டவரிடம் இருந்து பெருமளவு முதலீடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
“இது ஹோட்டல்கள் கட்டுவது போன்ற திட்டங்களை ஏற்படுத்தி சுற்றுப்பயணத் துறைக்கு முட்டுக்கொடுக்கும்,” என்று அவர் கூறினார். அத்துடன் தாங்கள் செய்யும் முதலீடுகளின் பயனைப் பெறுவதற்கு அவர்களுக்கு கால அவகாசமும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் மத்திய வங்கிப் புள்ளிவிவரங்கள்படி, பிலிப்பீன்சில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஜனவரியிலிருந்து மே மாத காலகட்டத்தில் அமெரிக்க டாலர் 3 பில்லியனுக்கு (S$3.8பி.) என 26.9% குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.