மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) எதிர்பார்க்கப்பட்டதைப்போல் பதவி நீக்கப்படுவதிலிருந்து தப்பினார்.
நாடாளுமன்ற கீழ் சபையில் அவரது ஆதரவாளர்கள் பலர் அவருக்கு எதிரான இரு புகார்களை நிராகரித்து வாக்களித்தனர்.
பிரதிநிதிகள் சபையின் நீதிக் குழு மார்க்கோசுக்கு எதிரான இரண்டு பதவி நீக்க புகார்களை தள்ளுபடி செய்து ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
அரசாங்கத்தின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு அதிபர் மார்க்கோஸ் துரோகம் இழைத்துவிட்டதாகப் புகாரளிக்கப்பட்டது. நம்பிக்கை துரோகம் செய்ததாகவும் ஊழல் செய்ததாகவும், அரசியல் சாசனத்தை மீறியதாகவும் மார்க்கோஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மார்க்கோஸ் ஜூனியர் மீதான பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது துணை அதிபர் சாரா டுட்டர்டேயை பதவி நீக்கத் தீர்மானம் வைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்ற தீர்மானத்திலிருந்து தப்பித்த அவர், மற்றொரு சுற்றுப் புகார்களை எதிர்கொண்டுள்ளார்.
மார்க்கோசைப் பதவிநீக்கம் செய்ய 300க்கும் மேற்பட்ட கீழவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு தேவைப்பட்டது. 284 உறுப்பினர்கள் புகார்களை நிராகரிக்க வாக்களித்தனர். நான்கு பேர் வாக்களிக்கவில்லை. எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பதவி நீக்கத்திற்கு வாக்களித்தனர். அடுத்த ஆண்டுவரையில் மார்க்கோசுக்கு எதிராக அடுத்த பதவி நீக்க புகார்களை முன்வைக்க அரசியலமைப்பு விதி தடை செய்கிறது.

