முன்னாள் மேயர் மீது கள்ளப்பணக் குற்றச்சாட்டு சுமத்த பிலிப்பீன்ஸ் முயற்சி

முன்னாள் மேயர் மீது கள்ளப்பணக் குற்றச்சாட்டு சுமத்த பிலிப்பீன்ஸ் முயற்சி

1 mins read
aae0f3ac-f848-48f6-b49c-678ea5ad9e36
முன்னாள் பாம்பான் நகர மேயர் ஏலிஸ் குவோ (நடுவில்). - படம்: செனட்டர் ரிசா ஹோன்டிவெரோஸ் அலுவலகம்

மணிலா: பிலிப்பீன்ஸ் நகரம் ஒன்றின் முன்னாள் மேயர் மீது கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றச்சாட்டு சுமத்தும் முயற்சியில் அந்நாட்டின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இறங்கியுள்ளனர்.

இணைய சூதாட்டக்கூடத் திட்டம் ஒன்றுடன் குவோவுக்குத் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதையொட்டி அவர் மீது கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இணைய மோசடிகள், ஆள்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதால் முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இணைய சூதாட்டக்கூடங்களை நடத்தும் சொத்துகளின் உரிமையாளர்களில் குவோவும் ஒருவர்.

முன்னாள் பாம்பான் நகர மேயரான குவோ மீது கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியதாக 62 குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு பிலிப்பீன்ஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். அந்நாட்டின் நீதி அமைச்சு புதன்கிழமையன்று (ஜனவரி 15) வெளியிட்ட தீர்மான ஆவணத்தில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்பில் மேலும் 30 தனிநபர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. குவோவுடன் இணைந்து பணியாற்றிய சாங் ருய்ஜின், லின் பாவ்யிங் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

அவ்விருவரும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரத்தில் குற்றவாளிகள் என நிரூபணமானவர்கள்.

இணைய சூதாட்டக்கூடத் திட்டத்தில் குவோவின் பங்கை இதற்கு மேல் எடுத்துரைக்க முடியாது என்று பிலிப்பீன்ஸ் நீதி அமைச்சு வெளியிட்ட தீர்மான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்தான் அத்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது என்றும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்