மணிலா: பிலிப்பீன்ஸ் தனது ராணுவத்தை மேம்படுத்த இலக்குக் கொண்டுள்ளது.
தனது ஆயுதங்களை அது நவீனப்படுத்த உள்ளது.
இதற்காக இந்தியாவிடமிருந்து கூடுதல் பிரமோஸ் ஏவுகணைகளையும் குறைந்தது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் அது கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை பிலிப்பீன்சின் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர் ஜூனியர் புதன்கிழமை (பிப்ரவரி 12) தெரிவித்தார்.
ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு ‘ஹொராய்சன்ஸ்’ என்று பிலப்பீன்ஸ் பெயரிட்டுள்ளது.
நவீனப்படுத்தும் பணிகளில் மூன்றாம் கட்டத்தில் பிலிப்பீன்ஸ் தற்போது இருக்கிறது.
சீனாவின் ராணுவப் பலத்தை எதிர்க்கும் ஆற்றலைத் தனது ராணுவம் கொண்டிருக்க வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் விரும்புகிறது.
இதற்காக அடுத்த பத்தாண்டுகளில் தனது ராணுவத்தை வலுப்படுத்த 35 பில்லியன் அமெரிக்க டாலரை (S$47.4 பில்லியன்) அது ஒதுக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தனது தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த இடை தூர ஏவுகணைகளையும் குறைந்தது 40 போர் விமானங்களையும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
தென்சீனக் கடற்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக ஜெனரல் பிராவ்னர் கூறினார்.