மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டு மக்கள் திங்கட்கிழமை (மே 12) இடைக்கால தேர்தலில் வாக்களித்தனர்.
இது வழக்கமாக குறைவான ஆரவாரத்துடன் நடக்கும் ஒரு தேர்தல். ஆனால், தற்போதைய தேர்தல் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் தற்பொழுது அரசியல் எதிரியாக உருவெடுத்திருக்கும் துணை அதிபர் சாரா டுட்டர்டேவுக்குமான ஒன்றாக மாறியுள்ளது.
தேர்தலில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அவ்விருவரும் போட்டியிடவில்லை என்றபோதும் இருவரும் தத்தம் ஆதரவு வேட்பாளர்களுக்கு காரசார பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் 110 மில்லியன் மக்களைக் கொண்ட பிலிப்பீன்சில் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் மார்கோஸுக்கு அடுத்து யார் அதிபராக வரக்கூடும் என்பதைத் தீர்மானிக்கும் அவரது செல்வாக்கு, திட்டங்கள், ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், அரசியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் திருவாட்டி டுட்டர்டேயை பொறுத்தமட்டில் இந்தத் தேர்தல் முடிவுகள் அவர் வருங்காலத்தில் தனது தந்தையின் வழி அதிபராக வரமுடியுமா இல்லை அரசியல் அதிகாரம் வெறும் கனவாகவே முடியுமா என்று தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆளுநர், மேயர் போன்ற பதவிகளுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனினும், சட்டம் இயற்றும் அதிகாரம், அரசியல் செல்வாக்கு, வருங்காலத்தில் அதிபர் பதவி வகிக்கும் வாய்ப்பு போன்றவற்றைத் தீர்மானிக்கக்கூடிய 24 செனட் சபை இடங்களுக்குத்தான் மார்கோஸ், டுட்டர்டேவுக்கு இடையே போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
“இந்தத் தேர்தல் அதிபர் மார்கோஸ் நிர்வாகத்துக்கு எதிரான மறைமுக வாக்களிப்பைவிட முக்கியமானது.
“இந்த செனட் சபைத் தேர்தல் முக்கியமான ஆதரவு வேட்பாளர்களின் போட்டி. அதிபர் மார்கோஸ் தனது சட்ட, பொருளியல் திட்டங்களை நிறைவேற்ற அவர் மிகப் பெரிய பெரும்பான்மை அல்லது பெரும்பான்மை பலத்துடனோ வருவது அவசியம்,” என்று கருத்துரைத்தார் பிலிப்பீன்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆரிஸ் ஆருகே.