ஃபீனிக்ஸ், அரிசோனா: மருத்துவமனைகளில் வெப்பத் தாக்கத்தாலும் கருங்காரை சூட்டுக் காயங்களாலும் ஏகப்பட்ட நோயாளிகள். வீடில்லாதோருக்கான காப்பகங்களில் பழுதடையும் குளிர்சாதனப் பெட்டிகள்.
கொவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்ப காலத்திற்குப்பின் முதல்முறையாக, சடலங்களுக்குக் கொள்கலன் அளவிலான குளிரூட்டிகளை மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் பயன்படுத்துகிறது. ஜூன் மாதத்தின் கடைசி நாளிலிருந்து ஜூலை 30 வரை, தொடர்ந்து 31 நாள்களாக ஃபீனிக்ஸ் நகரின் வெப்பநிலை குறைந்தது 43 டிகிரி செல்சியசாக நீடிக்கிறது. கடந்த 1974ஆம் ஆண்டு 18 நாள்கள் நீடித்த கடும் வெப்பத்தைத் தற்போதைய நிலைமை முறியடித்துவிட்டது.
ஜூலை மாதத்தின் கடைசி நாளன்று, வெப்பநிலை சற்றே தணிந்து 42.2 டிகிரி செல்சியசாக இருந்தது. ஆனால், இவ்வாரப் பிற்பகுதியில் 43 டிகிரி செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பம் மீண்டும் திரும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் உலகிலேயே ஃபீனிக்ஸ் நகரில்தான் ஆக அதிகமான நாள்கள் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜூலை மாதம் முழுவதும் நரக வேதனையில் இருக்கும் ஃபீனிக்ஸ் நகரின் 1.6 மில்லியன் மக்களின் ஆரோக்கியமும் பொறுமையும் குலையத் தொடங்கிவிட்டன. வீடில்லாதவர்களையும் வயதானவர்களையும் பாதுகாப்பதற்கான இயக்கமும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
“என்னால் இதைத் தாங்க முடியவில்லை,” என்று 45 வயது திருவாட்டி ரே ஹிக்ஸ் சென்ற வார வெப்பத்தைப் பற்றிச் சொன்னார். காற்றோட்டமில்லாத குளிரூட்டும் நிலையத்தின் தரையில் தனது ஏழு வயது மகனுடன் அவர் உட்கார்ந்திருந்தார். அவர்களைச் சுற்றிலும் அவர்களது பெட்டிகள் கிடந்தன.
வெளியே வெப்பநிலை 47.7 டிகிரி செல்சியஸ். குளிரூட்டும் நிலையம் மாலையில் மூடிய பிறகு அவர்கள் செல்வதற்கு இடமில்லை. அதிகரித்துவரும் வாடகையால் ஃபீனிக்ஸ் நகரில் வீடில்லாமல் இருக்கும் ஆயிரக்கணக்கானோரில் இவர்களும் உள்ளடங்குவர்.
பகலில் நூலகங்கள், பேரங்காடிகள், நிவாரண நிலையங்கள் போன்றவற்றில் தங்கிவிட்டு, இரவில் சுட்டெரிக்கும் வீதிகளைத் தவிர்க்க தங்குவிடுதிகள், கார்கள் அல்லது காப்பகப் படுக்கைகளை மக்கள் நாடுகின்றனர்.
வெப்பம் தணிவதற்குக் குறைந்தது மேலும் இரு மாதங்கள் ஆகும் நிலையில், எந்த அளவுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்பது தெரியாமல் சிலர் தவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு வெப்பத்தால் 25 பேர் உயிரிழந்ததாக ஃபீனிக்ஸ் மருத்துவப் பரிசோதகர் தெரிவித்தார். வெப்பம் சார்ந்த மேலும் 249 மரணங்களும் விசாரிக்கப்படுகின்றன.
முந்திய ஆண்டுகளைவிட இந்த ஜூலை மாதம் வெப்பப் பாதிப்புகளுக்கும் சூட்டுக் காயங்களுக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்திருப்பதாக ஃபீனிக்ஸ் நகரிலுள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன.
சென்ற வாரம், 80 வயதைக் கடந்த ஒரு மூதாட்டி சூட்டுக் காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தனது வீட்டுக்கு வெளியே சூடான நடைபாதையில் விழுந்துவிட்டார். அவருக்கு உதவி கிடைக்க இரண்டு மணிநேரம் ஆனது.
உயரமான கற்றாழைகள் வெப்பம் தாங்காமல் சாய்ந்து விழுகின்றன. நெடுஞ்சாலை நெடுகிலும் காணப்படும் பல்வேறு வகையான கற்றாழைகளும் மஞ்சளாக மாறத் தொடங்கிவிட்டன. ஃபீனிக்ஸ் நகரின் காப்பகங்கள் பலவும் நிறைந்துவிட்டன.