தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கெட்டில் குப்பைத் தொல்லை

2 mins read
e04c8407-32d7-4f4b-985d-1bc8f0a85d81
புக்கெட் கடலடியில் காணப்படும் குப்பை. - படம்: ராய்ட்டர்ஸ்

புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தலமான புக்கெட் தீவில் அளவுக்கதிகமான குப்பை சேர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் பல நெகிழி போத்தல்களும் காலியான மதுபானக் கலன்களும் காணப்படுகின்றன. அதோடு, புக்கெட்டில் நிலத்திலும் அதிக குப்பை சேர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கெட்டின் ஒரு பகுதியில் இருக்கும் குப்பைமேட்டில் லாரிகளும் டிராக்டர்களும் அதிக அளவில் குப்பையை விட்டுச் செல்கின்றன. புக்கெட்டில் தினமும் 1,000 டன்களுக்கும் அதிகமான குப்பை சேகரிக்கப்படுகிறது. அந்தக் குப்பைமேட்டில்தான் அது வீசப்பட்டு வருகிறது.

சில மாதங்களிலேயே அந்தக் குப்பைமேட்டில் அதிக குப்பை சேர்ந்துவிட்டதால் அங்கு கண்களுக்கு விருந்தாக இருக்கும் எழில் கொஞ்சும் மலைக் காட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதிவாசிகள் சிலர் கூறியுள்ளனர்.

தாய்லாந்தின் ஆகப் பெரிய தீவான புக்கெட், அதன் சுற்றுப்பயணத்துறைக்கு மெருகூட்ட வெகு விரைவில் வளர்ச்சி கண்டுள்ளது. தாய்லாந்துப் பொருளியலில் சுற்றுப்பயணத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

சென்ற ஆண்டு அந்நாட்டிற்கு 35.5 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் சுமார் 13 மில்லியன் பேர் புக்கெட்டுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள்.

இவ்வாண்டிறுதிக்குள் புக்கெட்டில் தினமும் 1,400 டன்கள் வரையில் குப்பை சேரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குப்பை சேர்வதை 15 விழுக்காடு குறைக்க வகைசெய்யும் திட்டத்தை ஆறு மாதங்களில் செயல்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். குப்பைமேட்டை விரிவுபடுத்தி புதிய குப்பை எரியாலையைக் (incinerator) கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிக குப்பையைப் கையாள நடவடிக்கை எடுப்பதும் குப்பை எரியாலைகளைக் கட்டுவதும் போதாது என்கின்றனர் வல்லுநர்கள்.

குறிப்புச் சொற்கள்