போஸ்டன்: அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கடந்த வாரம், ஆடவரின் உடலிலிருந்து மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட பன்றிச் சிறுநீரகத்தை அகற்றினர்.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த 67 வயது ஆடவரின் உடலுக்குள் பன்றிச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
ஆனால், அந்தப் பன்றிச் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து வருவதால் அது அகற்றப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 27) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திரு டிம் ஆண்ட்ரூஸ் சாதனை அளவாக 271 நாள்கள் வரை பன்றிச் சிறுநீரகத்துடன் வாழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இவர் அமெரிக்காவில் மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட பன்றிச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நான்காவது நபராவார்.
முதல் இரண்டு பேர் பன்றிச் சிறுநீரகம் பொருத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே மாண்டனர்.
மூன்றாவது நபரின் உடலிலிருந்து அது 130 நாள்கள் கழித்து அகற்றப்பட்டது.
அந்தச் சிறுநீரகம் அவருக்கு ஏற்புடையதாக அமையாததே இதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
திரு ஆண்ட்ரூஸ் இனி ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைத் தொடர்வார் என்றும் தானம் செய்யப்படும் மனித சிறுநீரகத்துக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

