ஜெருசலம்: இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, காஸாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஹமாஸ் குழுவை வீழ்த்தும் முயற்சியின் கடைசிக் கட்டமாக அது பார்க்கப்படுகிறது. அங்கு கடந்த 22 மாதங்களாகக் கடும் போர் நடந்துவருகிறது. போர்க்களத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியத் தற்காப்புப் படையினர் மனிதாபிமான அடிப்படையில் உதவிப்பொருள்களை வழங்க அமைச்சரவையின் முடிவு உதவும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இஸ்ரேலிய அமைச்சரவை 10 மணி நேரம் விவாதித்த பிறகு அறிக்கை வந்துள்ளது. இஸ்ரேலின் போர்க்கால இலக்குகளை மறுஉறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் வாக்களித்தனர்.
ஹமாஸ் குழுவிடமிருந்து பிணையாளிகள் அனைவரையும் மீட்பது, ஈரானிய ஆதரவில் செயல்படும் அக்குழு வசமுள்ள ஆயுதங்களைக் களையச் செய்வது, காஸா வட்டாரத்தில் ராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் அகற்றுவது முதலியவை இலக்குகளில் அடங்கும்.
பாலஸ்தீன வட்டாரம் தொடர்ந்து இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண்டும் என்பதற்கும் போருக்குப் பின்பு, வட்டாரத்தின் நிர்வாகம் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன ஆணையத்தின்கீழ் வரக்கூடாது என்பதற்கும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தற்காப்புப் படையின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே காஸா வட்டாரத்தின் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுப் பகுதி உள்ளது. போரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. அவர்கள் வசித்த வீடுகளும் நகரங்களும் தரைமட்டமாயின.
காஸா நகரின் வட பகுதி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. அங்குதான் ஹமாஸ் குழு, எஞ்சிய 50 பிணையாளிகளை வைத்திருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது. அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், காஸா நகரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் எடுத்துள்ள முடிவு தவறானது என்று கூறியிருக்கிறார். அந்த முடிவைப் பரிசீலிக்கும்படி இஸ்ரேலிய அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பூசலை முடிவுக்குக் கொண்டுவரவோ பிணையாளிகளை விடுவிக்கவோ இஸ்ரேலின் நடவடிக்கை எந்த வகையிலும் பயன்தராது. மாறாக, கூடுதல் ரத்தக்களறியையே அது ஏற்படுத்தும்,” என்றார் திரு ஸ்டார்மர்.

