ஜெருசலம்: முதலைகளை வனவிலங்குப் பட்டியலிலிருந்து அகற்றி ‘கூண்டில் வளர்க்கப்படும் வனவிலங்கு’ என இஸ்ரேலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் இடித் சில்மேன் மறுவகைப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீனக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை ஒன்றைச் சுற்றி முதலைகளைக் கொண்டு அரண் அமைக்கலாம் என்று கடந்த டிசம்பரில் முன்மொழிந்ததாகக் கூறப்படும் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
புளோரிடாவின் ‘அலிகேட்டர் அல்காட்ராஸ்’ குடியேற்றத் தடுப்புக்காவல் மையத்தைப் போன்ற ஒரு திட்டத்தை அவர் முன்மொழிந்திருந்தார்.
“நீங்கள் தப்பிக்க முயற்சி செய்ய நினைக்கிறீர்களா? மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள்,” என்று பென் கிவிர், சனிக்கிழமை (ஜூலை 16) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
அத்துடன் அவர், முதலை ஒன்றைச் சங்கிலியால் தாம் பிடித்துக்கொண்டிருப்பது போல காண்பிக்கும் செயற்கை நுண்ணறிவுப் படத்தையும் பகிர்ந்திருந்தார்.
2025ஆம் ஆண்டில் பென் கிவிர் இந்த யோசனையை முதன்முதலில் முன்வைத்தபோது, இஸ்ரேலின் இயற்கை, பூங்காக்கள் ஆணையம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இஸ்ரேலின் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
தற்போதைய இந்த மறுவகைப்படுத்துவது மூலம், இந்த விலங்குகளைக் கண்காணிக்கும் அதிகாரம் அந்த ஆணையத்திடமிருந்து ‘பாதுகாப்பு அமைப்பு’ எனக் கூறப்படும் குழு ஒன்றுக்கு மாற்றப்படுகிறது.
பென் கிவிர் நிர்வகிக்கும் இஸ்ரேல் சிறைச்சாலை அமைப்பு, அத்தகைய ஒரு பாதுகாப்பு அமைப்பு எனக் கூறப்படுகிறது.
புதன்கிழமை (ஜூலை 15) சட்டமாக்கப்பட்ட இந்த விதிமுறை, ‘நைல்’ ஆற்று முதலைகள் வளர்க்கப்படலாம் என்ற நிபந்தனையை விதிக்கிறது.
ஆனால் அவை ஒரு பாதுகாப்பு அமைப்பின் வசம் வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் அவை காடுகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின்கீழ் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.

