இத்தாலிக்கு விடுமுறைக்காகச் சென்ற ஓர் ஆஸ்திரேலியத் தம்பதிக்கு, கதிகலங்க வைக்கும் விமானப் பயண அனுபவம் ஒன்று காத்திருந்தது.
கத்தார் ஏர்வேஸ் விமானப் பயணத்தின்போது உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலுக்குப் பக்கத்தில் உட்கார வேண்டிய நிலை அந்தத் தம்பதிக்கு ஏற்பட்டது.
மிட்சல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற அந்தத் தம்பதியர், ‘எ நியூஸ் எஃபேர்’ எனும் ஆஸ்திரேலியச் செய்தி நிகழ்ச்சியில் தங்களுக்கு நேர்ந்ததைப் பகிர்ந்திருந்தனர்.
தொடக்கத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட வரிசையில் தங்களுடன் வேறு எவரும் உட்காராதபோது தம்பதியர் மகிழ்ந்தனர்.
இருப்பினும், விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரெனச் சரிந்து விழுந்து மாண்டதை அடுத்து அந்தத் தம்பதியின் அனுபவம் உடனே கசந்துவிட்டது.
விமானப் பயணத்தின் எஞ்சிய நான்கு மணி நேரத்திற்கும் தம்பதியின் பக்கத்தில் உயிரிழந்தவரின் உடல் வைக்கப்பட்டது.
விமானத்தை விட்டு இறங்கும்போது ‘கடும் பாதிப்பு’க்குத் தாங்கள் ஆளாகி இருந்தது போன்ற உணர்வைத் தம்பதியர் பெற்றனர்.
விமானத்தின் கழிவறையிலிருந்து வெளியேறிய ஒரு பெண் பயணி, தம்பதி உட்கார்ந்திருந்த இருக்கைகளுக்கு அருகே சரிந்து விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அந்த உடலை பிசினஸ் கிளாசுக்குக் கொண்டு செல்ல விமானப் பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பெரிய உடல்வாகு இருந்ததால் இருக்கைகளுக்கு நடுவே உள்ள நடைபாதையில் கொண்டு செல்ல சிரமமாக இருந்தது.
இதனால், சற்று எரிச்சலடைந்த விமானப் பணியாளர்கள், தம்பதியையும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கைகளையும் பார்த்தனர்.
“தயவுசெய்து சற்று நகர முடியுமா?” என்று அவர்கள் கேட்டதற்கு உடனே நகர்ந்துவிட்டார் ரிங். அவரது இருக்கையில் உயிரிழந்தவரின் உடல் வைக்கப்பட்டது.
பின்னர், கோலின் தமக்குப் பின்னால் இருந்த பயணி சொன்னதால் பின்வரிசையில் காலியாக இருந்த ஓர் இருக்கைக்கு மாறிக்கொண்டார்.
ஆனால், பயணம் முடியும்வரை ரிங் அந்த உடலுடன் ஒரே வரிசையில் உட்கார்ந்து செல்ல வேண்டியதாயிற்று.
இதையடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த கத்தார் ஏர்வேஸ், அந்தச் சம்பவத்தால் பிறருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கும் வேதனைக்கும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி விமானப் பயணத்தின்போது உயிரிழப்பு நேரும்போது பின்பற்றுவதற்கெனச் சில நடைமுறைகள் உள்ளன. குறைவான பயணிகள் இருக்கும் பகுதிக்கு உடலை வைத்தல், உடலுக்கு இருக்கை வார் இடுதல், உடலைப் போர்வையைக் கொண்டு மூடுதல் போன்றவை அவற்றில் அடங்கும்.