கவிஞர் சேரன் காலமானார்

கவிஞர் சேரன் காலமானார்

கோப்புப் படம்: விகடன்.

19 Nov 2026 - 12:05 pm

3 mins read

கவிஞர் சேரன் உடல்நலக் குறைவால் கனடா, டொரான்டோவில் புதன்கிழமை (நவம்பர் 18) இரவு காலமானார். அவருக்கு வயது 66.

முக்கிய உலகத் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர் கவிஞர் சேரன்.

1980கள் தொடங்கி இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரைக் கவிதைகள், கட்டுரைகள், உரைகள் வழியாகப் பதிவு செய்துவந்தவர். ஈழப் போர், இலங்கையின் தமிழ்க் கவிதை குறித்த கவனத்தைக் குவித்ததில் தொடக்ககாலக் கவிதைகளுக்கு பங்குண்டு.

சிங்கப்பூருக்கு நன்கு அறிமுகமான கவிஞர் சேரன், சிங்கப்பூர் இலக்கியங்களை வாசித்து அதுகுறித்து பொதுவெளியில் உரையாடும் மிகச் சில தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவர்.

சிங்கப்பூருக்கு 1997ல் முதன்முதலில் சிங்கப்பூருக்கு சேரன் வந்ததை நினைவுகூர்ந்த சேரனின் 50 ஆண்டு கால நண்பரான கனடா மூர்த்தி, அப்போது மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமி பல்வேறு சந்திப்புகளை ஏற்படுத்தியிருந்தார் கவிமாலை அமைப்பிலும் தேசிய கல்விக் கழகத்திலும் உரையாற்றியதைக் குறிப்பிட்டார்.

“அதன்பின்னர் அடிக்கடி சிங்கப்பூர் வந்த சேரன் இலக்கிய அமைப்புகள், படைப்பாளர்களுடன் அணுக்கமான உறவைப் பேணி வந்தார். சிங்கப்பூர் தமிழ் உலகைக் குறித்து மிகுந்த மதிப்பும் மரியாதை கொண்டவர். அதுகுறித்து விதைந்துரைப்பார்,” என்றார் திரு மூர்த்தி.

சேரன் தமிழ் முரசு நாளிதழில் 2005 முதல் 2006 வரை மாதம் இருமுறை ‘உயிர் கொல்லும் வார்த்தைகள்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2005ல் பங்கேற்றது முதல் சேரன் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துடன் தொடர் உரையாடலைக் கொண்டிருந்தார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2005ல் பங்கேற்றது முதல் சேரன் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துடன் தொடர் உரையாடலைக் கொண்டிருந்தார். - கோப்புப் படம்: தமிழ் முரசு

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2005ல் பங்கேற்ற அவர் தொடர்ந்து, பல சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் 2011ஆம் ஆண்டு முன்னெடுத்த முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சிங்கப்பூரின் முனைவர் அருண் மகிழ்நனுடன் இணைந்து ஒருங்கிணைத்தவர்களில் சேரனும் ஒருவர்.

“அம்மாநாட்டின் கட்டுரைத் தேர்வுக்கு பெரும் பங்களித்தவர் கவிஞர் சேரன்,” என்ற எழுத்தாளர் கழகத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான நா. ஆண்டியப்பன், “அவரது இழப்பு தமிழ்க் கவிதையுலகுக்கு பேரழிப்பு,” என்று வருந்தினார்.

சிங்கப்பூர் தங்கமுனை விருது, இலக்கியப் பரிசு நடுவர் குழுக்களில் இருந்துள்ளார். தங்க முனை பரிசு பெற்றவர்களுக்கான படைப்பிலக்கிய வழிகாட்டியாகவும் சேரன் பங்களித்துள்ளார்.

இவர் தமிழில் எட்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நான்கு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கவிஞர் முருகையனுடன் இணைந்து சேரன் 1985ல் தொகுத்து ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பு ஈழப்போரையும் வாழ்வையும் உயிர்ப்புடன் உணர்த்தும் மிக முக்கியமான ஈழத்துக் கவிதைத் தொகுப்பு.

“முனைவர் சேரன் தலைசிறந்த கவிஞராக இருந்ததோடல்லாது, பல்கலைக் கழக ஆசிரியர், சமூக வளர்ச்சியாளர், இளைஞரின் துருவ நட்சத்திரம், விடுதலைப் போராளி என்று பல துறைகளில் ஒரு உலக முன்னோடியாக விளங்கியவர், அவர் மறைவு மாபெரும் இழப்பு,” என்றார் அவருடன் இலக்கிய நிகழ்வுகளில் பணியாற்றியுள்ள சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி திரு அருண் மகிழ்நனர்.

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம், அளவெட்டியில் 1960ல் பிறந்த சேரனின் தந்தை கவிஞர் உருத்திரமூர்த்தி, ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர்.

1990களில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த சேரன், உங்கு யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்திலும் பின்னர் வின்சர் பல்கலைக்கழகத்திலும் மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.

சேரனின் மனைவி ஷேர்ரி எய்கல். பிள்ளைகள் அஞ்சானி, எல்லான். உடன்பிறந்தவர்கள் கவிஞர் அவ்வை, இனியாள், பாண்டியன், சோழன்.

குறிப்புச் சொற்கள்