பேங்காக்: மின்சார ஆணைய அலுவலகத்தை நோக்கி ஜூலை 12ஆம் தேதி இரவு 50 வயது ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
தாய்லாந்தின் சுராட் தாணி மாகாணத்தின் மின்சார ஆணையத்தின் அலுவலகக் கட்டடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
‘சோம்ச்சாய்’ என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், கட்டடத்தின் வாகனம் நிறுத்துமிடத்திற்குத் தனது மோட்டார்சைக்கிளில் வந்ததும் தன்னிடம் இருந்த இரண்டு வகை துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாகச் சுட்டதை, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
இதனால் கண்ணாடிக் கதவுகளும் அறிவிப்புப் பலகைகளும் சேதமடைந்தன.
பின்னர், அந்த ஆடவர் தன் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த கடைத்தொகுதிக்குச் சென்றார். அவர் கைகளில் துப்பாக்கிகள் இருந்ததாகவும் இதனால் மக்கள் பீதியில் ஓடியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கடைத்தொகுதியை அதிகாரிகள் சுற்றிவளைத்ததை அடுத்து ஆடவர் இரவு 8.30 மணியளவில் வெளியே நடந்துவந்தார்.
மோட்டார்சைக்கிளை ஆடவர் அடைவதற்குள் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
ஆடவரிடம் போர் கத்தி ஒன்றும் இருந்ததைப் பின்னர் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தன் வீட்டு மின்சாரத்தை ஆணையம் துண்டித்துவிட்டதாகவும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தன்னிடம் பணம் இல்லை என்றும் விசாரணையின்போது ஆடவர் தெரிவித்தார்.
குடும்பத்தாரிடம் உதவி கேட்டும் கிடைக்காத விரக்தியில் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு மின்சார ஆணைய அலுவலகத்திற்குத் தான் சென்றதாக ஆடவர் கூறினார்.

