அவசர காலங்களில் ஆடைக்கட்டுப்பாட்டை காரணங்காட்டி புகாரை மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

அவசர காலங்களில் ஆடைக்கட்டுப்பாட்டை காரணங்காட்டி புகாரை மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

1 mins read
2793942b-a87e-451f-b015-dd46630641f3
அவசரச் சூழலில் வருபவர்களின் ஆடையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

கோலாலம்பூர்: அவசர காலங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் ஆடையைக் காரணங்காட்டி அவர்களுக்கு உதவ மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று மலேசியாவின் உள்துறை துணை அமைச்சர் ஷம்சுல் அன்வார் நசாரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் புக்கிட் அமான் தலைமையகம் இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவை மீறுவது 1993ஆம் ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுங்குமுறை) விதிகளின்கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படும். அவசரச் சூழலில் வருபவர்களின் ஆடையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆடைக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி விபத்து புகார் அளிக்க வந்த தாய், மகளை ஜாசின் காவல் நிலையத்திற்குள் அனுமதிக்காதது போன்ற அண்மைய சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதுள்ள அரசாங்கச் சுற்றறிக்கைகளே போதுமான சட்ட வலிமையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகள் இந்த உத்தரவைப் பின்பற்றுவதை அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்