கோலாலம்பூர்: கிழக்கு மலேசிய மாநிலமான சரவாக்கில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கண்காணிப்பு நிலையம் ஒன்று தெரிவித்தது.
காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் அளவு 475ஆகப் பதிவாகியுள்ளது. இது, அவசரநிலையை அறிவிப்பதற்கான உச்சவரம்பை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பான அவசரகால எச்சரிக்கை வெளியிடப்பட்டால் முக்கியச் சேவைகள் தவிர அரசாங்க, தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவரும் துணை முதல்வருமான டக்லஸ் உகா எம்பாஸ் கூறினார்.
“காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500ஐத் தாண்டினால் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு நிலைமையை மதிப்பிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் அவர்.
வெளிப்புறங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் முகக்கவசம் அணியும்படி டக்லஸ் அறிவுறுத்தினார்.
கூச்சிங்கிலிருந்து 430 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கப்பிட் என்ற பகுதியில் புகைமூட்டம் காரணமாக மாநில அளவிலான தேசியத் தினக் கொண்டாட்டம் ரத்துசெய்யப்பட்டதாகச் சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் அறிவித்தார்.
இந்நிலையில், சாபா மாநிலத்தில் புகைமூட்டத்தால் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரிலும் டாவாவிலும் கடந்த 48 மணி நேரத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.
வடக்கு கலிமந்தானின் டாவாவ் வட்டாரத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 153ஆகப் பதிவானது.
கோத்தா கினபாலுவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) நிலவரப்படி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 122ஆகப் பதிவானது.
கலிமந்தானில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளால் ஏற்பட்ட எல்லை தாண்டிய புகையால் அந்த மாநிலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சாபா சுற்றுச்சூழல் துறை பிரதிநிதி நூர் ரஷிதா முகம்மது கஸாலி, நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தனர்.


