ரோம்: போப் ஃபிரான்சிஸ் இன்னமும் ஆபத்தான கட்டத்திலிருந்து மீளவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப்புக்கு ரோமில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 14ஆம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போப் பிரான்ஸிஸ் ஆபத்திலிருந்து மீளவில்லை என்று பிப்ரவரி 21ஆம் தேதி அவரது மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
“போப் ஃபிரான்சிஸ் ஆபத்திலிருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டால், அதற்குப் பதில் ‘இல்லை’ என்பதே” என்று மருத்துவர் செர்கியோ அல்ஃபியரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அதே சமயத்தில் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்று கேட்டால் அதற்கும் இல்லை என்றே பதில் என்றார் அவர்.
இரட்டை நிமோனியா தீவிரத் தொற்று, இரண்டு நுரையிரல்களையும் பாதித்து மூச்சுவிடுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
போப்புக்கு ஏற்பட்டுள்ள தொற்று சிக்கலானது என்று கூறிய வத்திகன், ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிரிகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
போப் பிரான்சிஸ் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடிகிறது. எளிய சில வேலைகளை அவரால் செய்ய முடிகிறது என்று அவரது மருத்துவக் குழு தெரிவித்தது.