வத்திகன் சிட்டி: வத்திகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் யாரும் எதிர்பார்த்திராத வேளையில், போப் பிரான்சிஸ் உற்சாகத்துடன் இருந்த மக்களைச் சந்தித்தார்.
இரட்டிப்பு நிமோனியாவால் அவதியுற்ற போப் மருத்துவமனையிலிருந்து இரண்டு வாரங்களுக்குமுன் வெளியேறிய பிறகு முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) மக்கள்முன் தோன்றினார்.
சென்ற மாதம் 23ஆம் தேதியிலிருந்து 88 வயது போப் பிரான்சிஸ் பொது இடங்களில் காணப்படவில்லை. ஆகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரோமின் கெமலி மருத்துவமனையில் ஐந்து வாரங்களுக்கும் மேல் சிகிச்சையளிக்கப்பட்டது.
கத்தோலிக்கர்களின் ஜுபிலி ஆண்டுப் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த நிலையில், முன்னறிவிப்பின்றி போப் பிரான்சிஸ் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு வந்தார். அப்போது கூடியிருந்த கூட்டத்தை நோக்கி அவர் கையசைத்தார்.
அனைவருக்கும் வாழ்த்து கூறிய அவர், “மிக்க நன்றி” என்றார்.
போப் பிரான்சிஸ் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நண்பகல் நேர பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததால் அவர் பிப்ரவரி 9ஆம் தேதியிலிருந்து அந்தப் பிரார்த்தனையைச் செய்ய முடியவில்லை.
ஏப்ரல் 6ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற கூட்டம் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் நோய்வாய்ப்பட்டோரையும் நினைவுகூரும் பிரார்த்தனை கூட்டமாக அமைந்தது.
இனிவரும் வாரங்களில் போப் பிரான்சிஸ் எத்தனை முறை பொதுமக்களுக்குமுன் தோன்றுவார் என்று தெரியவில்லை. அவர் இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் ஈஸ்டர் கொண்டாட்டத்தைப் போப் பிரான்சிஸால் வழிநடத்த முடியுமா என்பதை வத்திகன் இன்னும் உறுதிசெய்யவில்லை.