காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களின் நிலை குறித்து போப் லியோ கண்டனம்

2 mins read
தமது முதல் கிறிஸ்துமஸ் அருளுரையை ஆற்றினார்
97534236-613c-4087-a571-fdf1f2489d8c
போப் பதினான்காம் லியோ, வத்திகனில் உள்ள செயின்ட் பீட்டர்’ஸ் தேவாலயத்தில் டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டத்தை வழிநடத்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வத்திகன் சிட்டி: உலகெங்குமுள்ள கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பதினான்காம் லியோ, வியாழக்கிழமை (டிசம்பர் 25) ஆற்றிய தமது முதல் கிறிஸ்துமஸ் அருளுரையில் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் நிலை குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் பிரார்த்தனைக் கூட்டமாக இடம்பெறும் நிகழ்ச்சியில், வழக்கத்துக்கு மாறாக அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கரான அவர், இயேசுபிரான் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த நிகழ்வு, இறைவன் இவ்வுலக மக்களிடையே தமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டதைக் காட்டுகிறது என்றார். “பிறகு எப்படி காஸாவில் உள்ள கூடாரங்கள் வாரக்கணக்கில் மழை, காற்று, குளிரால் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி நாம் சிந்திக்காமலிருக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த மே மாதம் போப் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமது அருளுரைகளில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் குறித்துப் பேசுவது வழக்கமன்று.

பின்னர் வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்துரையிலும் அமெரிக்கக் கண்டத்தைக் கடந்து செல்லும் குடியேறிகளின் நிலை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், முன்னர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைகளை விமர்சித்த போப் லியோ, தமது வாழ்த்துரையில் திரு டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை.

கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் ஆற்றிய உரையில் ஏழைகளுக்கும் புதியவர்களுக்கும் உதவ மறுப்பது கடவுளை மறுப்பதற்குச் சமமானது என்று போப் குறிப்பிட்டார்.

அண்மையில் பலமுறை, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் நிலை குறித்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். நவம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசியபோது, பல்லாண்டுகளாக நீடிக்கும் இஸ்‌ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குப் பாலஸ்தீனத் தனி நாடுதான் தீர்வாக அமையும் என்றும் போப் கூறியிருந்தார்.

வியாழக்கிழமை செயின்ட் பீட்டர்’ஸ் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஆற்றிய அருளுரையில் உலகெங்கும் வீடின்றித் தவிக்கும் ஏழைகள் குறித்தும் போரால் ஏற்படும் சேதங்கள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

உலகில் நடைபெறும் போர்கள் அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்று தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துரையில் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரேன், சூடான், மாலி, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா போன்றவற்றில் நடைபெறும் அரசியல், சமூக அல்லது ராணுவ ரீதியான பிரச்சினைகளை அவர் சுட்டினார்.

“ஆயுதங்களின் இரைச்சல் ஓயட்டும். அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவோடும் கடப்பாட்டோடும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மரியாதைக்குரிய வகையில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தட்டும்,” என்றார் போப் லியோ.

குறிப்புச் சொற்கள்