புதுடெல்லி: பிரபல அமெரிக்க வலையொளிக் கலைஞரான லெக்ஸ் ஃபீரிட்மன், வரும் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வலையொளி நிகழ்ச்சி நடத்துவார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப்போவதை நினைத்துத் தான் உற்சாகமாக இருப்பதாக திரு ஃபிரிட்மன் கூறினார்.
“பிப்ரவரி இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் (@narendramodi) நான் வலையொளி நிகழ்ச்சி நடத்துவேன். நான் இதுவரை இந்தியா சென்றதில்லை. அதனால், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அதன் பலதரப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்கக் கலாசாரம், அமோகமான மக்கள் ஆகிய அம்சங்களை அனுபவிக்கப்போவதை எண்ணி உற்சாகமடைகிறேன்,” என்று திரு ஃபிரிட்மன் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
எலன் மஸ்க், அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி போன்ற பல்வேறு பிரபலங்களுடன் திரு ஃபிரிட்மன் வலையொளி நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

