மணிலா: ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை நிலவும் வேளையில் விமானங்களை அவசரமாகத் தரையிறக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
“தங்களால் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப இயலாது என பிலிப்பீன்ஸ் விமான நிறுவனங்களிடம் பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன.
“அதனால், ஒரு நாட்டுக்குச் செல்லவும் அங்கிருந்து திரும்பி வரவும் தேவையான எரிபொருளை பிலிப்பீன்ஸ் விமானங்களே கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் திரு மார்க்கோஸ் ஜூனியர் கூறினார்.
நீண்டதூரப் பயணங்கள் இனி மிகவும் கடுமையான பிரச்சினையாக இருக்கப் போகின்றன. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்க இயலாத காரணங்களால் விமானங்கள் தரையிறக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அப்படி ஒரு நிலை ஏற்படாது. இருப்பினும் அது அப்படி ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது,” என்றார் திரு மார்க்கோஸ் ஜூனியர்.
தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதல், 1970களுக்குப் பிறகு மிக மோசமான எண்ணெய்வள நெருக்கடி ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனால், ஆசியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மாற்றுத் திட்டங்களை வகுத்து வருகின்றன. பிலிப்பீன்ஸ் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதி மத்திய கிழக்கிலிருந்தே வருகிறது.
இறக்குமதி கச்சா எண்ணெய்யைச் சார்ந்துள்ள பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இதர நாடுகளைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. எரிசக்திப் பற்றாக்குறையும் மிதமிஞ்சிய உள்நாட்டு எரிபொருள் விலைகளுமே அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து அனைத்துலக வழித்தடங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அமல்படுத்தத் தயாராகி வருவதாக வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் விமான நிறுவனங்கள் கூறியுள்ளன. துபாய், தோஹா மற்றும் அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கு வட்டாரம் போர் காரணமாக மூடப்பட்டதால் உலகளாவிய விமானப் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தில் தவித்து வருகின்றனர்.

