வாஷிங்டன்: தம்முடைய வரிவிதிப்புக் கொள்கையை வணிக உடன்பாடுகளாக மாற்ற முயல்வதாகவும் இந்தியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான ‘சாத்தியமான’ வணிக ஒப்பந்தங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்தார்.
நியூஸ்நேஷன் தொலைக்காட்சிக் குழுமக் கூட்டத்தில் பங்கேற்றபோது, அம்மூன்று நாடுகளுடனான உடன்பாடுகள் குறித்து எப்போது அறிவிக்கப்படும் என்று திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அந்நாடுகளுடன் சாத்தியமான ஒப்பந்தங்கள் தம்மிடம் உள்ளன என்று அவர் பதிலளித்தார்.
அதே நேரத்தில், தாம் அறிவித்த இறக்குமதி வரிவிதிப்பின் பலன்களை அமெரிக்கா அறுவடை செய்துவருவதால், அம்மூன்று நாடுகளுடனான உடன்பாடுகளை இறுதிசெய்வதில் தாம் அவசரம் காட்டவில்லை என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
“உங்களைக் காட்டிலும் நான் அவசரப்படவில்லை. இப்போது நமது கை ஓங்கி இருக்கிறது. அவர்களுக்கு நாம் தேவை. நமக்கு அவர்கள் தேவையில்லை,” என்று டிரம்ப் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

