பேங்காக்: தாய்லாந்தில் கொள்கலன் லாரி ஒன்று, பாலத்தின் வழியாகச் சென்றபோது மின்கம்பங்களில் மோதியதால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்தடை ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில் சாமுட் பிராகன் தொழிற்பேட்டையின் நுழைவாயிலுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் அடுத்தடுத்து 70 மின்கம்பங்கள் சாய்க்கப்பட்டன. இதனால் சாமுட் சோங்க்ராம் மருத்துவமனையிலிருந்து நுவான் நெட் அல்லே நுழைவாயில் வரை இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்சாரம் தடைப்பட்டது.
இதில் அப்பகுதியில் உள்ள பல நூறு வீடுகளும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டன.
இதில் யாரும் காயம் அடைந்ததாகவோ, இறந்ததாகவோ தகவல் இல்லை. முக்கியமாகச் சுகும்விட் சாலை பாதிக்கப்படாமல் இருந்தது.
முதல் முறையாக அந்த வழியாகச் செல்லும் லாரி ஓட்டுநர் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் மேலே உள்ள மின்கம்பிகளைக் கவனிக்கவில்லை என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதில் மின்கம்பிகளில் லாரி சிக்கிக் கொண்டதால் மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன.
பெருநகர மின்சார ஆணையம், உடனடியாக குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி மின்சாரம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. விபத்தில் மின்சாரச் சாதனங்களுக்கும் மின்கம்பங்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டதாக அது தெரிவித்தது. சேதத்தின் மதிப்பு மில்லியன் கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆணையம், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும் மின்சாரத்தை விரைவாக விநியோகிக்க முழுத் திறனுடன் பணியாற்றி வருவதாக அது உறுதியளித்தது.

