கோலாலம்பூர்: ஜோகூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கங்கார் தெப்ராவ் உள்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சார இணைப்பை ஏற்படுத்த மலேசிய மின்சார வாரியமான தெனாகா நேஷினல் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, நலன் ஆகியவற்றைக் கட்டிக்காக்க உறுதிபூண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் வாரியம் தெரிவித்தது.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் பாதுகாப்பான முறையில் வழங்கும் நோக்கத்தில் மின்சாரக் கட்டமைப்பை முழுமையாக மேலாய்வு செய்தல், சுத்தம் செய்தல், சோதித்துப் பார்த்தல் போன்றவற்றுக்கு வாரியம் முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக, தொழில்நுட்பக் குழுக்கள் அயராது பாடுபட்டு வருகின்றன,” என அந்த அறிக்கையில் வாரியம் குறிப்பிட்டது.
தேவைப்படும் இடங்களில், முக்கியமான பிரிவுகளை இயக்கவும், அவசரநிலை சேவைகள் தொடரவும், தற்காலிக மின்சார விநியோகத்துக்காக மாற்றுத் தீர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த ஆகக் கடைசித் தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பெறலாம் என்றும் வாரியம் அறிவுறுத்தியது.
அத்துடன், சனிக்கிழமை (மார்ச் 22) காலை 8.00 மணி நிலவரப்படி ஜோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 86 விழுக்காடு இடங்களில் மின்சார விநியோகம் சீராக இருந்ததாக வாரியம் தெரிவித்தது.
ஜோகூரில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) காலை 10 மணி நிலவரப்படி 2,161 குடும்பங்களைச் சேர்ந்த 6,992 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜோகூரில் தற்காலிக நிவாரண முகாம்கள் 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு கூறியது.

