தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற்ற பிரபோவோ

2 mins read
a8055ee3-987b-4185-a86c-4ffc8fa0c88e
இந்தோனீசிய அதிபராக பதவியேற்க இருக்கும் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபராக பதவியேற்க இருக்கும் பிரபோவோ சுபியாந்தோவுக்கு அந்நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதிபர் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பிரபோவோ ஆதிக்கம் செலுத்தி வரும் அவரது கூட்டணியில் அக்கட்சி இணையுமா என்பது குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 7) கூறியது.

அதிபராக பிரபோவோ அக்டோபர் 20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியுடன் அவரது கூட்டணிக்கு உடன்படிக்கை எட்டினால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இருக்காது.

அப்படி நடந்தால், 2004ஆம் ஆண்டு இந்தோனீயாவில் அதிபர் தேர்தல் நடக்கத் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சி இல்லாமல் ஓர் அரசு ஆட்சியமைக்க இருப்பது இதுவே முதல்முறை என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

“இந்தோனீசியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதைத் திறம்பட கட்டமைக்க அமையவிருக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று நாடாளுமன்ற நாயகரும் இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி மூத்த தலைவருமான புவான் மகாராணி அக்டோபர் 16ஆம் தேதி (புதன்கிழமை)கூறினார்.

அவரது கட்சி பிரபோவோவின் கூட்டணியில் இணைகிறதா என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

அக்கட்சியைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, உடனடியாக எந்த பதிலும் அது தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் சொன்னது.

இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் தலைவர் மேகாவதி சுகர்னோபுத்ரிவுக்கும் பிரபோவோவுக்கும் இடையே நடக்கவிருக்கும் சந்திப்பு குறித்து சில வாரங்களாகப் பேசப்பட்டு வரும் சூழலில், அவர்களிடையே சந்திப்பு நிகழும் எனத் திருவாட்டி புவான் மகாராணி கூறியதாகச் சொல்லப்பட்டது.

மேலும், இருவரும் சந்திப்பார்கள் என்று பிரபோவோவின் உதவியாளர் இவ்வாரம் கூறினார்.

சந்திப்பு நிகழும் நாள், நேரம் குறித்த விவரங்களை இரு தரப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்