பேங்காக்: தாய்லாந்தின் சியாங் மாய் வட்டாரத்தில் இருக்கும் மிக உயர்ந்த மலையான டோய் இந்தனானிற்குச் சுற்றுப்பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அங்கு வழக்கத்திற்கு மாறாகக் குளிர்காலம் முன்னதாகவே தொடங்கியதால், அப்பகுதியில் கடும் மூடுபனி பொழிகிறது.
அப்பருவநிலை மாற்றத்தை அனுபவிக்கத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே அச்சிகரத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 9ஆம் தேதி நிலவரப்படி அங்கு 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
“பருவமழை காலம் நீடிப்பதால் இடியுடன் கூடிய மழை பெய்ய 20 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருந்தாலும், மலைப்பகுதிகளில் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறி,” என வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 10) தாய்லாந்து வானிலை ஆய்வுத் துறையின் வடக்கு வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளில் குளிர் காலம் விரைவில் தொடங்குவதால், இவ்வாண்டின் சுற்றுலாப் பருவம் அவ்வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.