சோல்: தென்கொரியாவில் வியட்னாமைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் விமான நிலையத்தில் திடீரெனச் சரிந்து விழுந்ததை அடுத்து அவரை அனுமதிக்கப் பல்வேறு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.
அதையடுத்து, அவசர மருத்துவ வண்டியில் 30 வயதுகளில் உள்ள அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததாக மார்ச் 17ஆம் தேதி இன்சியோன் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் அந்தப் பெண் மார்ச் 16ஆம் தேதி பிற்பகல் 12.20 மணியளவில் சரிந்து விழுந்தார். மீட்புப் பணியாளர்கள் முதலில் இன்ஹா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கர்ப்பிணியைக் கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால், அந்த மருத்துவமனையும் அருகில் இருந்த மற்ற மருத்துவமனைகளும் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்துவிட்டன.
வேறு வழியை மீட்புப் பணியாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவசர மருத்துவ வண்டியில் இருந்த கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வந்தது.
இரண்டு மணி நேரம் கழித்து அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் பின்னரே மருத்துவமனைக்குள் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர்.
அவசர மருத்துவ வண்டிகளில் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிக்கல் 2024ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இதற்கு அந்நாட்டின் மருத்துவ ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்டுள்ள ஊழியர் தட்டுப்பாடே காரணமாக உள்ளது.