ரியோ டி ஜெனிரோ: பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, தேசியப் பருவநிலை இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஜி20 நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலையை (Net Zero), திட்டமிட்டதற்கு ஐந்து முதல் பத்தாண்டுகள் முன்கூட்டியே அடைவதற்கு முயலும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதிக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துத் திரு லூலா பேசினார்.
முன்னதாக, பிரேசிலும் மேலும் பல நாடுகளும் 2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலைச் சமநிலையை எட்ட உறுதிகூறியிருந்தன. ஆனால் அந்த இலக்குகளை 2040 அல்லது 2045ஆம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
இதன் தொடர்பில் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு லூலா, இந்த ஆண்டு (2024) உலகின் ஆக வெப்பமான ஆண்டாகப் பதிவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதைச் சுட்டினார்.
வெள்ளம், வறட்சி போன்ற பருவநிலைப் பேரிடர்கள் அடிக்கடியும் மிகத் தீவிரமாகவும் ஏற்படுவதைக் குறிப்பிட்ட அவர், இனியும் காலத்தை வீணாக்கக்கூடாது என்றார்.
அமெரிக்காவில் திரு டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னர், பருவநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய செயல்பாடுகளை அதிகரிக்க உலகத் தலைவர்கள் முயல்கின்றனர்.
வரும் ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு திரு டிரம்ப், உலக வெப்பமயமாதல் தொடர்பிலான அமெரிக்காவின் கொள்கையை மீட்டுக்கொள்வார் என்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதி வெளியான ஜி20 தலைவர்களின் கூட்டறிக்கையில் பருவநிலை மாற்றம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ள, பருவநிலை நிதி ஒதுக்கீட்டை பில்லியன் டாலர் என்ற அளவிலிருந்து டிரில்லியன் டாலருக்கு விரைவாக உயர்த்த வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.