ஊடகங்களைத் தடைசெய்ய அதிபருக்கு உரிமை உண்டு: வெள்ளை மாளிகை

ஊடகங்களைத் தடைசெய்ய அதிபருக்கு உரிமை உண்டு: வெள்ளை மாளிகை

படம்: இபிஏ

03 Oct 2026 - 5:03 pm

2 mins read

வா‌ஷிங்டன்: கடந்த செப்டம்பர் மாதம் சிஎன்என், எம்எஸ் நவ், பொலிட்டிக்கோ ஆகிய செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகை வளாகங்களுக்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு செய்ய அமெரிக்க அதிபருக்கு உரிமை உள்ளது என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நீதிமன்ற ஆவணங்களில் வெள்ளை மாளிகை வலியுறுத்தியது. இதன் தொடர்பில் தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்ட ஊடகங்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரிக்குமாறு வெள்ளை மாளிகை, நீதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் எந்த செய்தியாளர்களுக்குக் கூடுதல் அனுமதி வழங்கப்படவேண்டும் என்பதை அதிபர்கள்தான் முடிவெடுத்ததாகவும் அது ஒவ்வோர் ஆட்சியிலும் பெரிதும் மாறுபடுவதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் வந்த அறிவிப்பு

சிஎன்என், எம்எஸ் நவ், பொலிட்டிக்கோ ஆகியவை வெள்ளை மாளிகை வளாகங்களுக்குள் நுழைவதைத் தாம் தடைசெய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

தங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுவதற்காக சம்பந்தப்பட்ட ஊடகங்கள் விரைவில் வழக்கு தொடுத்தன. பிறகு இரண்டு வாரங்களுக்கு அந்த ஊடகங்களுக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றம், வெள்ளை மாளிகைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 8) நிறைவடைகிறது.

அதனையடுத்து தங்களுக்குக் கூடுதல் காலம் அனுமதி வழங்குமாறு அந்த மூன்று ஊடகங்களும் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளன.

திரு டிரம்ப்பின் அரசாங்கம் ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மற்ற அம்சங்களிலும் கருத்துவேறுபாடுகளில் ஈடுபட்டுள்ளது. அவற்றின் தொடர்பான சட்டரீதியான அரசாங்கத்தின் வாதங்களும் இந்த விவகாரத்தில் அதன் வாதங்களும் ஒத்துப்போகின்றன.

சிறப்பு அனுமதி வழங்கப்படாமல் இருப்பது, வெள்ளை மாளிகை விவகாரங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதைப் பொறுத்தவரை எதிர்மறையான, முடக்கும் வகையிலான செயலாகாது என்று வெள்ளை மாளிகையின் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

ஊடகங்களின் குற்றச்சாட்டு

தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு திரு டிரம்ப் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அவர் தங்களுக்குத் தடை விதித்ததாகவும் அதன் மூலம் தங்களுக்கு இருக்கவேண்டிய உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த மூன்று ஊடகங்களும் வாதிடுகின்றன.

எனினும், அவை டிரம்ப்பை விமர்சித்தது கருத்தில்கொள்ளப்படாவிட்டாலும் அரசாங்கம் அந்நடவடிக்கையை எடுத்திருக்கும் என்று வெள்ளை மாளிகையின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்