மணிலா: பிலிப்பீன்சின் துணை அதிபர் சாரா டுட்டர்டே தமக்கு எதிராக, வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிப்பதாக அந்நாட்டு அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் நவம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.
நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
தாம் கொல்லப்பட்டால் அதிபர் மார்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோரைக் கொல்லுமாறு கொலையாளி ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளதாக திருவாட்டி டுட்டர்டே அண்மையில் தெரிவித்திருந்தார்.
“அதிபரைப் படுகொலை செய்யத் திட்டமிடுவது அவ்வளவு எளிதான காரியமா? அப்படி என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று அதிபர் மார்கோஸ் கேள்வி எழுப்பினார்.
திருவாட்டி டுட்டர்டேயின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
“இத்தகைய சட்டவிரோத முயற்சிகளை புறக்கணித்துவிடக்கூடாது,” என்றார் அதிபர் மார்கோஸ்.
அதிபர் மார்கோசைப் படுகொலை செய்ய தீட்டப்படும் சதியின் மூளையாக திருவாட்டி டுட்டர்டே செயல்படுவதாக பிலிப்பீன்ஸ் நீதித்துறை நவம்பர் 5ஆம் தேதியன்று தெரிவித்தது.
இதுகுறித்து விளக்கமளிக்க திருவாட்டி டுட்டர்டேக்கு அது ஐந்து நாள்கள் அவகாசம் வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டின் அதிபரைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அதிபரைக் கொல்ல திட்டமிடப்படுவதாக அதில் தொடர்புடையவரே வெளிப்படையாகக் கூறிவிட்டார். இனி சட்டம் தனது கடமையைச் செய்யும்,” என்று நீதித்துறை அமைச்சரின் உதவியாளர் ஜெசி ஆண்ட்ரேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
துணை அதிபருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்றார் அவர்.

