தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு திட்டங்களுக்கு அதிபர் பிரபோவோ முன்னுரிமை

2 mins read
8ca64704-7999-48e1-812e-b6cbdea44b8c
தமது அமைச்சர்களுடன் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அதிபராக பிரபோவோ சுபியாந்தோ அக்டோபர் 20ஆம் தேதியன்று பொறுப்பேற்றார்.

அவர் தலைமையின்கீழ் 48 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நான்கு திட்டங்களுக்கு பிரபோவோ முன்னுரிமை கொடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒன்று இலவச மதிய உணவுத் திட்டமாகும்.

இந்தோனீசியாவில் ஏழ்மையில் வாடும் சமூகங்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அனைத்துச் சிறுவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்று அதிபர் பிரபோவோ உறுதி அளித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்காக இந்தோனீசிய அரசாங்கம் 71 டிரில்லியன் ரூப்பியா (S$6 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.

இலவச மதிய உணவுத் திட்டம் ஜகார்த்தா, செமாராங் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகளில் நடப்பில் உள்ளது.

திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு சோறுடன் இரண்டு உணவுவகைகள் பரிமாறப்படுகிறது.

இலவச மதிய உணவுத் திட்டம் 2029ஆம் ஆண்டுக்குள் 82.9 மில்லியன் சிறுவர்களைச் சென்றடைய வேண்டும் என்று இந்தோனீசிய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

இதற்கு 400 டிரில்லியன் ரூப்பியா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனீசியாவுக்கு வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்புச் சேவையை மேம்படுத்தவும் அதிபர் பிரபோவோ திட்டமிட்டுள்ளார்.

இந்தோனீசியர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்வதை உறுதி செய்ய இலவச மருத்துவப் பரிசோதனைகளை வழங்க அதிபர் பிரபோவோ விரும்புகிறார்.

50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காச நோயை எதிர்கொள்ள இந்தோனீசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் இலவச மருத்துவப் பரிசோதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

காசநோயால் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனீசியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நோயின் காரணமாக இந்தோனீசியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 100,000 உயிரிழப்புகள் பதிவாகின்றன.

காசநோய் எதிர்ப்பு திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 8 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்துக்காக மேலும் 3.3 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்த மேலும் 1.7 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருள்களுக்காக மற்ற நாடுகளை நம்பியிருக்கும் நிலையை எதிர்கொள்ள அதிபர் பிரபோவோ விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பதற்றநிலை, நிலையற்றதன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு இதுகுறித்து அவர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறியப்படுகிறது.

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உணவு தொடர்பாக சுயசார்பு நிலையை இந்தோனீசியா எட்ட வேண்டும் என்று அதிபர் பிரபோவோ தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அதிபர் பிரபோவோ இலக்கு கொண்டுள்ளார்.

மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த பள்ளிப் புதுப்பிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

நாடெங்கும் உள்ள பள்ளிகளைப் புதுப்பிக்க கிட்டத்தட்ட 20 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்