மாஸ்கோ: உலகின் முன்னணிக் கடற்படையைக் கொண்டுள்ள நாடாக ரஷ்யாவை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், அதனைச் சீரமைப்பதற்கான புதிய உத்திக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் மாளிகை உதவியாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
சீனா, அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மூன்றாவது வலிமைமிக்க கடற்படையைக் கொண்டுள்ள நாடாக ரஷ்யா திகழ்கிறது.
இந்நிலையில், உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யக் கடற்படை தொடர் சேதத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ‘2050 வரைக்குமான ரஷ்யக் கடற்படை மேம்பாட்டிற்கான உத்தி’ எனும் புதிய கடற்படை உத்தியைச் செயல்படுத்த அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளதாகத் திரு பட்ருஷேவ் கூறியுள்ளார்.
“உலகின் வலிமையான கடற்படையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று எனும் நிலையை ரஷ்யா படிப்படியாகத் திரும்பப் பெற்று வருகிறது,” என்று ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் தெரிவித்தார்.
“தொலைநோக்கு இல்லாமலும் ரஷ்யக் கடற்படையின் இலக்குகள், நோக்கங்களை வரையறுக்காமலும் அத்தகைய பணியை மேற்கொள்வது கடினம்,” என்றும் அவர் சொன்னார்.
புதிய உத்தி குறித்து அவர் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
ஆயினும், அமெரிக்காவுடனான பனிப்போர் காலகட்டத்தில் செலவிட்டதைப்போல, இப்போதும் தற்காப்பிற்கும் பாதுகாப்பிற்குமான செலவினங்களை அது உயர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவே உலகின் ஆகப் பெரிய கடற்படையைக் கொண்டுள்ளதாகக் கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சீனாவிடம் 460 போர்க்கப்பல்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் 79 நீர்மூழ்கிக் கப்பல்களும் 222 போர்க்கப்பல்களும் இருக்கலாம் என இணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.