கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடைந்தார்.
அவர் பயணம் செய்த ‘ஏர்ஃபோஸ் ஒன்’ விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் முனையத்தில் தரையிறங்கியது.
விமானத்திலிருந்து வெளியேறிய அதிபர் டிரம்ப்பை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோனும் வரவேற்றனர்.
கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்கிறார்.
மலேசியாவிலிருந்து அவர் ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அமெரிக்க, மலேசியக் கொடிகளை அசைத்தவாறு பலர் அதிபர் டிரம்ப்பை வரவேற்றனர்.
பாரம்பரிய நடனத்தை அதிபர் டிரம்ப் கண்டு களித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தாளத்துக்கு ஏற்ப அவரும் கொஞ்சம் ஆடினார்.
கூடியிருந்தோரிடமிருந்து அமெரிக்க, மலேசியக் கொடிகளைப் பெற்று அவற்றுடன் படங்கள் எடுத்துக்கொண்டார்.
தம்மை வரவேற்ற நடனமணிகள், கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அதிபர் டிரம்ப்பின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக விமான நிலையத்தில் கூடியிருந்த பலர் கூறினர்.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் மலேசியப் பயணம் மலேசியாவில் உள்ள சிலரைக் கோபப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை அதிபர் டிரம்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்பாங் பூங்காவில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், மெர்டேக்கா சதுக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
பாதுகாப்பு கருதி அம்பாங் பூங்காவைச் சுற்றி மலேசியக் காவல்துறையினர் தடுப்பு போட்டதே இதற்குக் காரணம்.
கலவரத் தடுப்பு அதிகாரிகள் பலர் அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்களால் காஸா நிலைகுலைந்து, அங்குள்ள பாலஸ்தீனர்கள் கடுந்துயரில் வாடுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் சுட்டினர்.
இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாகும்.
இதன் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராகவும் அதிருப்தி அலை வீசுகிறது.

