துபாய்: ஈரானிடம் தாம் பொறுமையை இழப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கவலை தெரிவித்தார்.
அதே சமயம், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துவிடவேண்டும் என்பதை சீன அதிபர் ஸி ஜின்பிங் ஏற்றுக்கொண்டதாக அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதாக சீனா இதுவரை அறிவிக்கவில்லை.
பெய்ஜிங்கிலிருந்து அமெரிக்கா திரும்பியபோது ஏர்ஃபோர்ஸ் 1 விமானத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அவர் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் சீன நிறுவனங்கள்மீது விதிக்கப்பட்டத் தடைகளை அகற்றுவது குறித்து தாம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சீனா ஈரானிடம் ஆக அதிகமாக எண்ணெய் வாங்கும் நாடாகும்.
அவரது கருத்துகள், சீனா ஈரானிடம் வைத்திருக்கும் நல்லுறவைக் கொண்டு, மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டுவர உதவுமா என்ற கேள்விக்கு விடை அளிக்கவில்லை.
எண்ணெய் விநியோகத்தை மீட்டெடுக்க சீன அதிபர் ஸி ஜின்பிங்,ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பாரா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
“நான் எவ்வித உதவியையும் சீனாவிடம் கேட்கவில்லை. ஏனென்றால், உதவி கேட்டால் அதற்கு ஏதாவது நாம் திரும்பத் தர வேண்டும்,” என்றார் அதிபர் டிரம்ப்.
ஈரான் குறித்து இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை சீன அதிபர் ஸி வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை
இருப்பினும் இருநாட்டு மாநாடு நடந்துகொண்டிருந்தபோதே சீன வெளியுறவு அமைச்சு, இந்தப் போர் தேவையற்றது என அதன் வெறுப்பை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

