குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்போருக்குத் தலா $6,300: அதிபர் டிரம்ப் வாக்குறுதி

குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்போருக்குத் தலா $6,300: அதிபர் டிரம்ப் வாக்குறுதி

2 mins read
f8be2b6c-faff-4ec5-809b-69e7ab7ca626
மத்திய கால தேசியத் தேர்தலுக்கு டாலாஸ் மாநிலத்தில் குடியரசுக் கட்சி புதன்கிழமை (செப்டம்பர் 9) ஏற்பாடு செய்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

 டாலாஸ், டெக்சஸ்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைத் தவணைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அத் தேர்தலில் தமது குடியரசுக் கட்சிக்கு வாக்களித்து அந்நாட்டுக் காங்கிரசை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தலா S$6,300 (US$5,000) வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அவரது குடியரசுக் கட்சியினர் புதன்கிழமை (செப்டம்பர் 9) டெக்சஸ் மாநிலத்தின் டாலாஸ் நகரில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அதனை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அவரது கட்சியின்மீது நம்பிக்கை இழந்துள்ள அமெரிக்க மக்களை ஈர்க்க அவர் இவ்வாறு முயற்சி செய்வதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குடியரசுக் கட்சி முதன்முறையாக இதுபோன்ற மாநாட்டை இடைத் தவணைத் தேர்தலுக்கு முன் நடத்தியுள்ளது. அவரது வாக்குறுதி சட்டப்பூர்வமானதா, அது எவ்வாறு வழங்கப்படும் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் வாக்களிக்கத் தகுதிபெற்ற ஏறத்தாழ 270 மில்லியன் மக்கள் உள்ளனர். அதிபர் டிரம்ப்பின் வாக்குறுதியின்படி அத்தொகையை வழங்கினால் அதற்கு S$1.71 டிரில்லியன் (US$1.35 டிரில்லியன்) தேவைப்படும்.

அதிபர் டிரம்ப் ஏறத்தாழ 45 நிமிடங்கள் மாநாட்டில் உரையாற்றினார். அவரது உரையில் அமெரிக்க அதிபர்களின் ஆட்சி வரலாற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளே ஆகச் சிறந்தது என்று கூறி பெருமிதம் தெரிவித்தார்.

விரைவில் நடக்கவிருக்கும் இந்த இடைத் தவணைத் தேர்தலில் அவரது நடவடிக்கைகளே முன்னிலைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடந்த கருத்துக்கணிப்புகளில் பல வாக்காளர்கள் அதிபர் டிரம்ப் மீதும் குடியரசுக் கட்சிமீதும் அதிருப்தி அடைந்திருப்பது தெரியவந்தது.

அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள், ஈரான் போர் ஆகிய இரு பிரச்சினைகள் குறித்து மனநிறைவு அடையாத வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

ஜனநாயகக் கட்சியினரிடம் நாட்டை ஒப்படைத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதனை நிலைநிறுத்துவதில் காலம் செலவாகும் என்ற திரு டிரம்ப், குடியரசுக் கட்சியினரே வருங்கால சந்ததியினருக்கு உகந்த வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சியை வழங்குவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டு நாள் மாநாட்டின் இறுதியில் வியாழக்கிழமை இரவு நன்றியுரையும் அதிபர் டிரம்ப்பினால் வழங்கப்படவுள்ளது. அன்றைய தினம் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சிறப்புரை ஆற்றுவார். குடியரசுக் கட்சியின் கொள்கைகள் அப்போது விளக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்அமெரிக்காஅதிபர்மாநாடுதுணை அதிபர்பேரணி உரைஉரையாடல்