வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உள்நாட்டு வருவாய் சேவைத் துறை, கருவூலத் துறை ஆகியவற்றுக்கு எதிராக $10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமது தனிப்பட்ட வருமான வரி குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதால் அந்த வழக்கைத் தொடுத்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
நியூயார்க் டைம்ஸ், பிரோபப்ளிக்கா ஆகிய இடதுசாரி ஊடகங்களுக்கு உள்நாட்டு வருவாய் சேவைத் துறையின் முன்னாள் அதிகாரி சார்ல்ஸ் லிட்டில்ஜான் மூலம் தமது வருவாய் வரி குறித்த தகவல்கள் கசிந்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
அத்தகைய செயலைத் தடுக்க உள்நாட்டு வருவாய் சேவைத் துறையும் கருவூலத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக மியாமி மத்திய நீதிமன்றத்தில் திரு டிரம்ப்பும், அவரது மகன்களும் பதிவுசெய்த வழக்கில் தெரிவித்தனர்.
வருவாய் வரி தகவல்கள் கசிந்ததால் தங்கள் நற்பெயருக்கும் வர்த்தகத்துக்கும் குறிப்பிடத்தக்க மாற்ற முடியாத சேதம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட எட்டு செய்திக் கட்டுரைகளும் பிரோபப்ளிகா பிரசுரித்த குறைந்தது 50 கட்டுரைகளும் லிட்டில்ஜான் மூலம் கசிந்த வருவாய் வரி தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகத் திரு டிரம்ப் சுட்டினார்.
தமது நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசாங்க அமைப்புக்கு எதிராகத் திரு டிரம்ப் வழக்குத் தொடுத்திருப்பது வழக்கத்துக்கு மாறுபட்டதாக உள்ளது.
2024 அதிபர் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனிப்பட்ட விதத்தில் பெரிய தொகையை இழப்பீடாகக் கோரி பல வழக்குகளைத் தொடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தலில் வெற்றிபெற தமக்கு இருந்த வாய்ப்பைக் கீழறுக்க முற்பட்டதாகக் கூறி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, பென்குயின் ரேன்டம் புத்தகப் பதிப்பகம் ஆகியவை வெளியிட்ட செய்திகளையும் புத்தகங்களையும் எதிர்த்து $15 பில்லியன் இழப்பீடு கேட்டு திரு டிரம்ப் வழக்குப் பதிவுசெய்தார்.
திரு டிரம்ப் தனிப்பட்ட முறையில் வால் ஸ்திரீட் ஜர்னல் செய்தி நிறுவனத்துக்கு எதிராக $10 பில்லியன் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்தார்.

