பெய்ஜிங்: சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே உட்கட்சி பூசல்களைத் தவிர்க்க முடியாது என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கட்டொழுங்கை நிலைநாட்ட கூடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“வெளிப்புறச் சூழலிலும் கட்சி உறுப்பியத்திலும் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒரே கட்சியைச் சேர்ந்தோரிடையே பூசல்கள், பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து எதிர்மறை அம்சங்களை உடனடியாக நீக்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் கட்சி எப்போதும் துடிப்புடன் செயல்படும்,” என்று அதிபர் ஸி கூறினார்.
முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் களையெடுக்கவும் அரசியல் வைரிகளை ஒழித்துக்கட்டவும் ஊழல் தடுப்பு இயக்கத்தை அதிபர் ஸி தீவிரப்படுத்தியுள்ளார்.
இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இதற்கு முன் இல்லாத அளவில் பல அதிகாரிகள் சிக்கினர்.
அதிபர் ஸி மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கையால் அதிகாரிகள் பலர் அச்சத்தில் உறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மெதுவடையும் பொருளியலை உயிர்ப்பிக்க முயற்சி மேற்கொள்ளும்போது ஏதேனும் தவறு செய்துவிடக்கூடும் என்று எண்ணி, துணிவுடன் செயல்பட அவர்கள் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

