உறுதியான நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் அதிபர் ஸியின் கட்சிக் கூட்டம்

உறுதியான நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் அதிபர் ஸியின் கட்சிக் கூட்டம்

படம்: ஏபி

26 Oct 2026 - 7:19 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவின் கம்யூனிசக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கான நான்கு நாள் கூட்டம் திங்கட்கிழமை (அக்டோபர் 26) தொடங்கியுள்ளது.

அதில், முழுமையான, கடுமையான கட்சியின் சுய நிர்வாகத்தின்மீது கூட்டம் கவனம் செலுத்தும் வேளையில், சீன அதிபர் ஸி ஜின்பிங் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும் கருத்தியல் ஒருமைப்பாட்டை நடைமுறைப்படுத்தவும் முற்பட்டுள்ளார்.

ஆளும் திறனை அதிகரிப்பது, சுயதிருப்திக்கு எதிராக விழிப்புடன் இருப்பது, அதிபரின் முக்கிய பிரசாரமான ஊழலுக்கு எதிரான போராட்டம் எனக் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கும் ஆவணத்தின் வரைவு பற்றி, கட்சியின் மத்தியச் செயற்குழுவிடம் திரு ஸி விளக்கமளித்ததாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்தது.

கட்சியின் முடிவெடுக்கும் உச்ச அமைப்புகளில் மிகப்பெரிய மத்தியச் செயற்குழுவின் முக்கிய முடிவுகளும் திட்டங்களும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது என்று அது குறிப்பிட்டது.

“இடைவெளிகளை அடைத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நிறுவன விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் செம்மைப்படுத்துவதும் அவற்றை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதும் அவசியமாகும்,” என்று அது கூறியது.

மத்தியச் செயற்குழு இம்மாதம் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் கூடுகிறது.

தற்போதைய குழு 2022ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதால், இது ஐந்தாவது கூட்டம் என்பதால் தற்போது நடைபெறும் கூட்டம் ஐந்தாவது அமர்வு என்று அழைக்கப்படுகிறது.

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைமை மாற்றத்திற்கு முன்னதாகக் கூடும் கட்சியின் கடைசி முக்கியக் கூட்டமாக இது அமையக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அப்போது திரு ஸி நான்காவது முறையாக தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் திரு ஸி ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தைக் கடுமையாக முன்னெடுத்துள்ளார்.

அதன்வழி அதிபரின் நட்பு வட்டாரங்கள் உட்பட நூற்றுக்கணக்கான மூத்த அதிகாரிகளும் உயர்மட்டத் தளபதிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்